கேன்ஸ் திரைப்பட விழாவில் “சர்வாதிகாரிகள் மரித்துப் போவார்கள்” என்று பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய படையெடுப்பை எதிர்கொண்டு உக்ரேனியர்களுடன் ஒற்றுமையைக் காட்டுமாறு சினிமா உலகைக் கேட்டுக் கொண்டார்.
பிரான்சில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வீடியோ இணைப்பு மூலம் அங்கு பேசினாடர். உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து நேரடி செயற்கைக்கோள் தொடர்பு மூலம் பேசிய வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய படையெடுப்பை எதிர்கொள்ளும் உக்ரேனியர்களுடன் ஒற்றுமையைக் காட்டுமாறு சினிமா உலகைக் கேட்டுக் கொண்டார்.
சினிமாவிற்கும் யதார்த்தத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஜெலென்ஸ்கி விரிவாகப் பேசினார். “Francis Ford Coppola வின் "Apocalypse Now" மற்றும் சார்லி சாப்ளினின் "The Great Dictator" போன்ற படங்கள் அப்போதைய சர்வாதிகாரிகளை எதிர்த்து வெளியாகின. நமது காலத்தின் சினிமா அமைதியாக இல்லை என்பதை நிரூபிக்கும் ஒரு புதிய சாப்ளின் எங்களுக்குத் தேவை. தங்களின் எதிர்காலம் சினிமாவில் தங்கியுள்ளது. இன்று சினிமா அமைதியாக இல்லை. இந்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.மனிதர்களின் வெறுப்பு மறைந்துவிடும், சர்வாதிகாரிகள் செத்துப் போவார்கள். மேலும் அவர்கள் மக்களிடமிருந்து பெற்ற அதிகாரம் மக்களிடம் திரும்பும். மனிதர்கள் இறக்கும் வரை, சுதந்திரம் அழியாது.” என்று பேசினார் ஜெலன்ஸ்கி.
உக்ரைனில் நடந்த போரைப் பற்றி கவனத்தை ஈர்ப்பதற்காக ஜெலென்ஸ்கி ஒரு சர்வதேச நிகழ்வில் தோன்றுவது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம் 64 வது வருடாந்திர கிராமி விருதுகளின் போது ஒரு வீடியோ செய்தியை ஜெலென்ஸ்கி வழங்கினார். அவர் தனது நாட்டிற்கு ஆதரவை வலியுறுத்தினார் மற்றும் போரினால் கொண்டுவரப்பட்ட மௌனத்தை இசையால் நிரப்புமாறு கலைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.