பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் ரத்து செய்யப்பட்ட பழைய ரூ.500, 1000 நோட்டுகள் நேபாள நாட்டில் இன்றும் மாற்றிக்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம், பழைய 500 - 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. கள்ளப் பணம் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எனவும் மத்திய அரசு வர்ணித்தது. ஆனால், இதனால் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வர்த்தகர்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். இதனால் பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டன. பின்னர் ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கை மேற்கொண்டு ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில், அண்டை நாடான நேபாளத்தின் மிகப்பெரிய இரண்டு வங்கிகளாக ‘நேபாள ராஷ்ட்ரிய வங்கி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி’ மாற்று ஏற்பாடுகளை செய்ய தவறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேபாள நாட்டில் இன்றும் பழைய ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது.
நேபாள சூதாட்ட கிளப்களில் நோட்டுகளை எளிதில் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் நேபாள பண மதிப்பில் பாதிதான் கிடைக்கும். இந்திய ரூபாயில் ரூ.500 கொடுத்தால் முன்பு நேபாள ரூபாயில் 800 கிடைக்கும். தற்போது பழைய 500 ரூபாய் நோட்டை மாற்றில் நேபாள ரூபாயில் 400 மட்டுமே கிடைக்கும். நேபாளத்தில் உள்ள நடன கிளப்களில் இந்தியாவைச் சேர்ந்த பலர் தாங்கள் வைத்திருந்த பழைய நோட்டுகளை மாற்றிச் செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் ஆயிரக்கணக்கான முறைகேடான நடன பார்கள் உள்ளன.