ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சியரா லியோன். அந் நாட்டின் தலைநகர் பிரீடவுனில் பெய்த மழை காரணமாக, தலைநகரை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் மண்சரிவுகள் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் அப்படியே உயிரிழந்தனர். வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 600 பேரை காணவில்லை. மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பேரழிவை தொடர்ந்து நோய் தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அந்நாட்டு அரசின் கோரிக்கையை அடுத்து அங்குள்ள சீன நிறுவனங்கள் மீட்பு குழுவினரை அனுப்பியுள்ளன. மேலும் 64 லட்சம் ரூபாயையும், மருந்துகளையும் நிவாரண உதவியாக அந்நிறுவனங்கள் வழங்கியுள்ளன. சீன அரசு தரப்பிலும் முதற்கட்டமாக 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக சியரா லியோனில் உள்ள சீன தூதரக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.