ஒருபுறம் சண்டை நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை தொடர்பான செய்திகள் நம்பிக்கை தரும் அதே நிலையில், இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை பாலஸ்தீன புலம் பெயர் மக்களுக்கான நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வரும் ஐநா முகமையைச் சேர்ந்த 108 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பிலிப் லஸ்ஸாரினி தெரிவித்துள்ளார். பெரும்பாலும் தங்கள் ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் உறவினர்களும் கொல்லப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் இந்த கொடுமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பினைச் சேர்ந்த திமா அல்ஹஜ் அவரது ஆறு மாத குழந்தை, கணவர் மற்றும் சகோதரர்களோடு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இக்கொடூரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை என உலக சுகாதார அமைப்பின் டாக்டர் டெட்ரோஸ் அதநோம் கேப்ரியேசஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
எல்லைகளற்ற மருத்துவர்கள் குழுவைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அங்கு இயங்கி வரும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குழந்தைகள் எனவும் அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.