இந்தியா மட்டுமன்றி பல நாடுகளில் டிக்டாக் தடை செய்யப்பட்டாலும், அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக டிக்டாக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு இளைஞர்கள் மத்தியில் டிக்டாக் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. இதில் பலர் தங்களது நடிப்புத் திறனையும், நடனத் திறனையும், ஏன் இன்னும் சிலர் சாகசங்கள் செய்தும் வீடியோக்களை பதிவிட்டு பாராட்டையும் பெறுகின்றனர். இதில் டிக் டாக் மூலம் லைக்குகளை அள்ள, சாகசம் செய்யும் ஆர்வக்கோளாறான இளைஞர்களும் உள்ளனர்.
அவ்வப்போது வித்தியாசமாக எதையேனும் செய்து 'சேலஞ்ச்' என்ற பெயரில் டிக்டாக்கில் பரபரப்பு கிளப்புவது வழக்கமாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது டிக்டாக்கில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது #boatjumping சேலஞ்ச். வேகமாகச் செல்லும் படகின் பின்புறத்திலிருந்து தண்ணீரில் குதிப்பதுதான் இந்த #boatjumping சேலஞ்ச். 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த சேலஞ்ச் பிரபலமடைய ஆரம்பித்திருக்கிறது. மிகவும் ஆபத்தான இந்த சவாலை சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் செய்து வருகிறார்கள். இதனால் இந்த சேலஞ்ச் விபரீதத்தில் முடிவது அமெரிக்காவில் தொடர்கதையாகி வருகின்றது.
கடந்த ஆறு மாதங்களில் #boatjumping சேலஞ்ச் செய்த நான்கு பேர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். இவை எல்லாமே தவிர்த்திருக்க வேண்டிய இறப்புகள் எனக்கூறும் சில்டர்ஸ்பர்க் மீட்புக் குழுவின் கேப்டன் ஜிம் டென்னிஸ், வேகமாக செல்லும் படகில் இருந்து தண்ணீரில் குதிப்பது என்பது கான்கிரீட் மீது விழுவதைப் போன்றதுதான். அது உடனடி மரணத்துக்கோ அல்லது நிரந்தரமான உடல் ஊனத்துக்கோ இட்டுச்செல்லும் என எச்சரிக்கிறார். “இது போன்ற அபாயகரமான சவால்களை யாரும் முயற்சிக்க வேண்டாம்” எனவும் அவர் டிக்டாக் பயனர்களிடம் அறிவுத்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் கூசா ஆற்றில் #boatjumping சேலஞ்ச் செய்த ஒரு ஆண் முதன்முதலாக இறந்தார். இதில் கொடுமை என்னவென்றால் இந்த சேலஞ்சை வீடியோ எடுத்தது அவரது மனைவி. குழந்தைகள் மற்றும் மனைவி கண்முன்னே உயிர் விட்டிருக்கிறார் அந்நபர். விலைமதிப்பற்ற மனித உயிர் ஆர்வக்கோளாறு காரணமாக பறிபோவதை என்னவென்று சொல்வது?