’’நான் டசன் மாஸ்க் கேட்டேன்; ஆனால் 12 மாஸ்க்தான் அனுப்பியுள்ளார்’’ என்ற கஸ்டமரின் விசித்திர புகார் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாடிக்கையாளர் எப்போதும் சரியானவர் என்கிறது ஒரு வழக்கமொழி. ஆனால் அதே வாடிக்கையாளர் வேடிக்கையான தவறை செய்யும்போது உரிமையாளர் என்ன செய்வார்? மின்னசோட்டாவில் உள்ள சிறிய தொழில் உரிமையாளர் தனது கோபக்கார வாடிக்கையாளரை சமாளித்த குறுஞ்செய்திகள் இணையத்தில் பரவி வைரலாகிவருகின்றன.
ஜடா மெக்ரே என்ற பெண் ஜடா’ஸ் வாலட் என்ற பெயரில் ஷர்ட்டுகள், பெல்ட் மற்றும் மாஸ்குகள் அடங்கிய சிறிய ஆன்லைன் ஷாப் ஒன்றை நடத்திவருகிறார். இவர் தனது கஸ்டமருடன் சமீபத்தில் நடத்திய உரையாடலை ட்விட்டரில் பகிர்ந்தது வைரலானது. இதுகுறித்து மெக்ரே கூறுகையில், ‘’வாடிக்கையாளரின் ’தவறான மாஸ்க் ஆர்டர்’ என்ற இமெயிலை பார்த்தபோது நான் மனச்சோர்வடைந்து விட்டேன்’’ என்றார்.
மெக்ரே பகிர்ந்த ஸ்க்ரீன்ஷாட்டுகளில் வாடிக்கையாளர், ‘’ஹலோ, நான் ஒரு டசன் மாஸ்க்கை ஆர்டர் செய்திருந்தேன்; ஆனால் எனக்கு 12 மாஸ்க்குகளைத்தான் அனுப்பி இருக்கிறீர்கள். எனக்கு அனைத்தும் தேவைப்பட்டது. என்னுடைய பணத்தைத் திருப்பித் தாருங்கள். இனிமேல் உங்களுடைய வேலைக்கு உதவமாட்டேன். நான் சிறிய தொழில்களுக்கு உதவநினைத்தேன். ஆனால் நீங்கள் மக்களை கருத்தில் கொள்வதில்லை’’ என்று கூறியிருக்கிறார்.
அதற்கு மெக்ரே, ‘’டசன் என்றால் 12. நான் சரியாகத்தான் அனுப்பியுள்ளேன். அதனால் பணத்தை திருப்பித்தர முடியாது. ஆனால் நீங்கள் ஏமாற்றம் அடைந்ததற்காக 5 டாலர் கூப்பனை சலுகையாக அளிக்கிறேன்’’ என்று பதிலளித்துள்ளார்.
அதற்கு அந்த வாடிக்கையாளர் ‘’எனக்கு விருப்பமில்லை’’ என்று பதிலளித்துள்ளார். மேலும், விலைப்பட்டியலில் தான் அதை கவனிக்கவில்லை என்றும், தனக்கு 20 தேவைப்பட்டது என்றும், டசன் என்றால் 12 என தான் கேள்விப்பட்டதே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ‘’அதை படிக்கும்போது டப் சென் ( dub zen)என தனக்கு தெரிந்ததாகவும், டப் என்றால் 20 என்றும் கூறியிருக்கிறார்.
டிவிட்டரில் பகிரப்பட்ட இந்த விசித்திர சண்டையின் ஸ்க்ரீன்ஷாட்டை 3 லட்சம்பேர் லைக் செய்துள்ளனர்.