காசா எல்லைப்பகுதியை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகவும், ஹமாசின் நிதி அமைச்சர் ஜாவத் அபு, இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலிய நகரங்களில் ஊடுருவி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்கு பழி தீர்க்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. ஏராளமான இஸ்ரேலியர்கள் காசாவில் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய தாக்குதலில் காசா பகுதியில் 700 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், காசாவின் அனைத்து மாவட்டங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. வானுயர எழும் தீப்பிழம்புகளும், புகை மூட்டமும் இஸ்ரேலின் கோரத்தாக்குதலை காட்டுகின்றன.
பதுங்கிக்கொள்ள எந்த இடமும் இல்லாத நிலையில், ஆறு பத்திரிகையாளர்களும் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை எந்த முழுமையான எண்ணிக்கையும் உறுதிபடுத்தப்படாத நிலையில், ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 900 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக தரைவழித்தாக்குதலை இஸ்ரேல் நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காசாவில் இருந்து சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. குடிநீர் விநியோகத்தையும், மின்சாரத்தையும் இஸ்ரேல் துண்டித்திருப்பதால் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர். காசா முழுவதும் பற்றி எரிவதால் மேலும் பலர் இடம்பெயர்வார்கள் என்றும் அஞ்சப்படுகிறது. இதுவரை 13 மருத்துவமனைகளை இஸ்ரேல் தகர்த்துள்ளதால், காயம் பட்டவர்களுக்கான சிகிச்சையும் கேள்விக்குறியாகி உள்ளது.
மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை முழுமையாக ஆதரிக்கின்றன. அரபு நாடுகளில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. ஈரானும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.