வங்கதேசம் சத்கிராவின் ஷியாம்நகரில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஸ்வரி என்ற காளி கோயில் அமைந்துள்ளது. இந்து புராணங்களின்படி, இக்கோயில் இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருக்கும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது.
12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அனாரி என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அவர் ஜசோரேஸ்வரி பீடத்திற்காக 100 கதவுகள் கொண்ட கோயிலை உருவாக்கினார். பின்னர் அது 13ஆம் நூற்றாண்டில் லக்ஷ்மன் சென்னால் புதுப்பிக்கப்பட்டது, இறுதியாக, ராஜா பிரதாபதித்யா 16 ஆம் நூற்றாண்டில் கோயிலை மீண்டும் கட்டினார்.
இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது வங்காளதேச சுற்றுப்பயணத்தின்போது இந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள காளி தேவி சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக் கிரீடம் ஒன்றைப் பரிசாக வழங்கினார். உலகம் முழுவதும் தலைவிரித்தாடிய கோவிட் 19 தொற்றுநோய்க்குப் பிறகு பிரதமர் மோடி மேற்கொண்ட முதல் பயணம் அது. அப்போதுதான் இந்த கிரீடத்தைப் பரிசாக வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் தற்போது திருடப்பட்டுள்ளது. நேற்று கோயில் பூசாரி தினசரி பூஜையை முடித்துவிட்டுக் கிளம்பியபின், மதியம் 2 மணி முதல் 2.30 மணிக்குள் இந்த திருட்டு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், இந்தியாவில் தஞ்சமடைந்தார். எனினும், இதன் பிறகு நடைபெற்ற போராட்டத்தில் இந்துக்களும், இந்துக் கோயில்களும் தாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.