பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்வு இலங்கை யாழ்ப்பாணம் முற்ற வெளிப்பகுதியில் நேற்று இரவு வெகு விமர்சையாக பிரம்மாண்ட மேடையில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகை தமன்னா, யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மிர்ச்சி சிவா, ரம்பா, சின்னத்திரை நடிகர்கள் புகழ், பாலா, சான்டி மாஸ்டர், ஆலியா மானசா, சஞ்சீவ், மைனா நந்தினி, கலா மாஸ்டர், ரட்சிதா மகாலட்சுமி, ஸ்டான்லி, டிடி, மற்றும் பல பாடகர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது பாதுகாப்பு வளையத்தை உடைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் நிகழ்ச்சியை நடத்த விடாமல் சத்தமிட்டதுடன், அரங்கத்திற்குள் அவர்கள் கலவரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு வந்திருந்த பல திரைப்பட நட்சத்திரங்கள், அமைதியாக இருக்கும் படி இளைஞர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் இளைஞர்கள் கேட்காமல் மீண்டும் கோஷமிட்டுள்ளனர். ஒருகட்டத்தில் கலா மாஸ்டர் “ஆடியன்ஸ் ப்ளீஸ், ப்ளீஸ்... உங்க கால்ல விழுறோம். அமைதியாக இருங்க” என யாழ்ப்பாணம் இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் ஹரிஹரன் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவங்களுக்கு மத்தியில், நடிகை தமன்னாவின் நடனம் ஒன்றுமட்டும் அரங்கில் நடைபெற்றது.
நிகழ்வின் முடிவில் பலர் காயமடைந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் எவ்வளவோ தடுக்க முயன்றும், அவர்கள் உள்ளே செல்வதை அச்சமயத்தில் தடுக்க முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒருவழியாக போராடி இறுதியில் காவல்துறையினர்தான் அனைவரையும் கட்டுப்படுத்தி நிலைமையை சீராக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.