இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களின் பராமரிப்பு ஒப்பந்தத்தை அதானி குழுமம் எடுத்திருப்பதுபோல், கென்ய அரசுடனும் கையெழுத்திட்டுள்ளது. அந்த வகையில், ஜோமோ சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு சுமார் ரூ.1,500 கோடிக்கு தர கென்யா அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என கூறி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்த நிலையில், இந்தியாவின் அதானி குழுமம் ஜோமோ சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை கென்யா உயர் நீதிமன்றம் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக கென்யா மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையின்போது கிழக்கு ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து மையமான ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை ( ஜேகேஐஏ) 30 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கினால், வேலை இழப்புகள், நிதி ஆபத்து உள்ளிட்டவை ஏற்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற வழக்கு முடிவடையும் வரை அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.