உலக மக்கள் தொகையில் சீன நாட்டின் பங்கு 18.47 சதவிகிதம். அதனால் 143 கோடி மக்கள் வாழும் நாடாக திகழ்கிறது. உலகளவில் மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் சீனாவுக்கே முதலிடம். இந்நிலையில் சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த பத்து ஆண்டுகளில் தான் மிகவும் குறைவு என்ற புள்ளிவிவரத்தை சீன அரசு வெளியிட்டிருந்தது. அதற்கு தீர்வு காணும் நோக்கில் சீன அரசு தம்பதியர்கள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்ற கொள்கையை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1979 வாக்கில் சீனா நாட்டில் மக்கள் ஒரு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள அரசு கொள்கை ரீதியாக முடிவு செய்து அதை நடைமுறைப்படுத்தி இருந்தது. அதற்காக அரசின் முடிவை மீறும் மக்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து அந்த கொள்கையில் கடந்த 2016 வாக்கில் தளர்வுகளை கொடுத்து தம்பதியர்கள் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் தற்போது தம்பதியர்கள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்ற கொள்கை அடிப்படையிலான முடிவுக்கு வந்துள்ளது சீனா.
இதன் மூலம் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் 32.2 சதவிகிதம் (கடந்த 2019 தகவலின் அடிப்படையில்) என்ற விகிதத்தை குறைக்க சீனா முயற்சி எடுத்துள்ளது.