பெற்றோருக்கு ஒரு விமானம், 13 மாத பெண் குழந்தைக்கு மற்றொரு விமானம் - அதிர்ந்த பெற்றோர்

பெற்றோருக்கு ஒரு விமானம், 13 மாத பெண் குழந்தைக்கு மற்றொரு விமானம் - அதிர்ந்த பெற்றோர்
பெற்றோருக்கு ஒரு விமானம், 13 மாத பெண் குழந்தைக்கு மற்றொரு விமானம் - அதிர்ந்த பெற்றோர்
Published on

ஆஸ்திரேலியா விமான நிறுவனம் ஒன்று, பெற்றோருக்கு ஒரு விமானத்திலும், 13 மாத பெண் குழந்தைக்கு வேறொரு விமானத்திலும் பயண இருக்கையை பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீபனி மற்றும் ஆண்ட்ரூ பிரஹாம் என்ற தம்பதிக்கு, 13 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த தம்பதி தங்களது பெண் குழந்தையுடன் ஐரோப்பாவிற்கு விடுமுறையை கழிக்கச் சென்றுள்ளனர். விடுமுறை முடிந்தநிலையில், மீண்டும் தங்களது சொந்த நாடான ஆஸ்திரேலியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான நிறுவனத்தில், விமான பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்டீபனி - ஆண்ட்ரூ பிரஹாம் தம்பதியின் பயண செய்யும் விமானம், மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக குவாண்டஸ் விமான நிறுவனம் அவர்களுக்கு தொடர்பு கொண்டு கூறியுள்ளது. அங்குதான் பிரச்சனையே ஆரம்பித்துள்ளது. ஏனெனில் ஸ்டீபனி - ஆண்ட்ரூ பிரஹாம் தம்பதிக்கு ஒரு விமானத்திலும், அவர்களின் 13 மாத பெண் குழந்தைக்கு வேறு ஒரு விமானத்திலும் இருக்கைகள் பதிவுசெய்துள்ளதைக் கேட்டு, குழந்தையின் பெற்றோர் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரச்சனையை சரிசெய்ய எண்ணி, குவாண்டாஸ் விமான நிறுவனத்திற்கு தொடர்புகொண்டு கேட்டபோது, தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று விமான நிறுவனம் மழுப்பும் வகையில் கூறியது, தங்களுக்கு மேலும் அதிர்ச்சியளித்ததாக தம்பதியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும், ஒரே நேரத்தில் 3 பேரும் விமானத்தில் பயணிப்பதற்காக, சம்பந்தப்பட்ட குவாண்டாஸ் விமான நிறுவனத்துக்கு, 24 மணிநேரத்தில் 55 தனித்தனி தொலைபேசி அழைப்புகள் மூலமாக, சுமார் 20 மணி நேரம் 47 நிமிடங்கள் 13 விநாடிகள் பேசி, அந்த தம்பதி இறுதியாக பிரச்சனையை சரிசெய்துள்ளனர்.

ஆயினும் 12 நாட்களுக்குப் பிறகே தங்களது குழந்தையுடன் ஒரே விமானத்தில் பயணிக்க டிக்கெட் கிடைத்துள்ளதால், அந்த தம்பதி தற்போது விடுமுறை நாட்கள் தாண்டியும் ரோம் நகரில் தங்க வேண்டியுள்ளதாகியுள்ளது. விமான நிறுவனத்தின் இந்த தவறால், கூடுதலாக இரண்டு வாரங்கள் ரோம் நகரில் தங்குவதற்கான பெரும் செலவுகளையும் அந்த தம்பதி எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முதலில் தங்களது தவறை ஏற்க மறுத்துவிட்ட குவாண்டாஸ் விமான நிறுவனம், தற்போது ஸ்டீபனி - ஆண்ட்ரூ பிரஹாம் தம்பதியிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. நிர்வாகத்தின் கோளாறால் இந்த தவறு நடந்துவிட்டதாகவும், ஸ்டீபனி - ஆண்ட்ரூ பிரஹாம் தம்பதி, கூடுதல் நாட்கள் தங்கும் இடத்திற்கான செலவை திருப்பிச் செலுத்த முன்வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் அந்த தம்பதியினர் தற்போது சற்று மன நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com