கொரோனா இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன. அதற்காக விலையை நாம் செலுத்த வேண்டியிருக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்டத்தின் தலைவர் மைக் ரியான் தெரிவித்தார்.
இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா, ஒரு சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் பல நாடுகளில் கடைகள், உணவகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதோடு சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் தொடர்பான விதிகளை எளிதாக்க முடிவு செய்திருக்கும் சூழலில் இந்த எச்சரிக்கையை வெளியிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்டத்தின் தலைவர் மைக் ரியான், “இதேபோக்கு தொடர்ந்தால், கொரோனா வைரஸின் புதிய அலை வெகு தொலைவில் இருக்காது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இன்னும் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வரவில்லை” என்று எச்சரித்திருக்கிறார்
புதிய டெல்டா வகை வைரஸ் பாதிப்புகள் உலகில் அதிகரித்து வரும் சூழலில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் அதிக அளவில் பரவக்கூடியது என்றும் நம்பப்படுகிறது. டெல்டா மாறுபாடு இப்போது கிட்டத்தட்ட 100 நாடுகளில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.