கொரோனா தடுப்பூசி ஆண்களை பெண்மை மிகுந்தவர்களாக மாற்றி விடலாம். பெண்களுக்கு தாடி மீசை வளர வைத்து விடலாம் என்று பிரேசில் அதிபர் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகளில் அந்த நாடு உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பிரேசிலில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும், அதேசமயம் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படாது என்றும் அந்நாட்டின் அதிபர் ஜய்ல் போல்சானரோ ஏற்கனவே அறிவித்தார்.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி நல்ல பலன் தருவது உறுதியானதால், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்தநிலையில், ‘'நான் கோவிட் தடுப்பு மருந்து போட்டுக் கொள்ளப் போவதில்லை. அது ஆண்களை பெண்மை மிகுந்தவர்களாக மாற்றி விடலாம். பெண்களுக்கு தாடி மீசை வளர வைத்து விடலாம். அவ்வளவு ஏன், மனிதர்கள் எல்லாரும் முதலைகளாக கூட மாறி விடலாம். எனவே தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு பிரேசில் அரசு எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது’ என பிரேசில் அதிபர் ஜய்ல் போல்சானரோ கூறியுள்ளார்.
இதனால் பிரேசில் நாட்டு மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? வேண்டாமா? என்ற பெரும் குழப்பத்தில் உள்ளனர்.