கொரோனா வைரஸ் பிடியில் உள்ள வுஹான் நகரில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை 9 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று முதல் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ், 20-க்கும் அதிகமான நாடுகளை எட்டியுள்ளது. சீனாவில் மட்டும் இதுவரை 350 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆட்கொல்லி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தன் நாட்டு மக்களை காப்பாற்றும் வகையில், சீன அரசு வுஹான் நகரில் 25 ஆயிரம் சதுர மீட்டரில், ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையை கடந்த மாதம் 23 ஆம் தேதி கட்டத் தொடங்கியது.
10 நாட்களில் முடிக்கத் திட்டமிட்ட பணியில், ஏழாயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பணிகள் விரைவாக நடைபெற்ற நிலையில், திட்டமிட்டதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக நேற்றே மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்தன. 30 அவசர சிகிச்சைப் பிரிவுகளுடன் கட்டப்பட்ட மருத்துவமனையை சீன அதிபர் ஸீ ஜிங்பிங் தொடங்கி வைத்தார். சீன ராணுவத்தின் ஆயிரத்து 400 மருத்துவப் பணியாளர்கள் இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த சிறப்பு மருத்துவமனையில் இன்று முதல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த மருத்துவமனையிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில், ஆயிரத்து 600 படுக்கைகள் கொண்ட மற்றொரு சிறப்பு மருத்துவமனையும் கட்டப்பட்டு வருகிறது. அதன் பணிகள் நாளை மறுநாள் முடிவுக்கு வரும் என சீன அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.