அனைத்து கண்டங்களுக்கும் பரவியதா கொரோனா வைரஸ் ?

அனைத்து கண்டங்களுக்கும் பரவியதா கொரோனா வைரஸ் ?
அனைத்து கண்டங்களுக்கும் பரவியதா கொரோனா வைரஸ் ?
Published on

சீனாவை அச்சுறுத்திவந்த கொரோனா வைரஸ் அண்டார்டிகாவை தவிர அனைத்து கண்டங்களுக்கும் பரவிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில், 433 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், 29 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 744ஆக அதிகரிக்கத்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 497 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு தென் கொரியா. அங்கு ஆயிரத்து 595 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் 24 மணி நேரத்தில் 334 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 11பேர் உயிரிழந்துள்ள நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர பிரான்ஸ், எகிப்து, அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், குவைத், பஹ்ரைன், குரோஷியா, ரோமானியா, ஸ்பெயின், வடக்கு மெக்டோனியா, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. இதற்கிடையில் பிரேசிலில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய கண்டத்தையும் கொரோனா தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் சீனாவைத் தவிர்த்து உலக நாடுகளில் மட்டும் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களாக சீனாவை மட்டும் அச்சுறுத்திவந்த கொரோனா திடீரென இத்தாலி, ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் வேகமாக பரவிவருவது கவலையளிப்பதாக உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே அண்டார்டிகா கண்டத்தை தவிர அனைத்து கண்டங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com