நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப்பிறகு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், அந்நாட்டின் தேர்தலை தள்ளிவைத்துள்ளார் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று வேகமாக உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் திண்டாடிக்கொண்டிருக்கும்போது நியூசிலாந்து நாட்டின் இளம் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திறமையாக கையாண்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தார்.
அங்கு மொத்தமே 1500-க்கும் குறைவான கொரோனா தொற்றுதான் பதிவாகியிருந்தது. இதுவரை 14 மரணங்களே நிகழ்ந்துள்ளன. கொரோனா தொற்று முழுமையாக இல்லாததால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜெசிந்தா ஆர்டென் ஊரடங்கை முழுமையாக தளர்த்தினார். அதோடு, சுற்றுலா தலங்களையும் திறந்திருந்தார். இந்நிலையில் , 102 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று வந்ததால் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளார்கள்.
வரும் செப்டம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டின் பிரதமர் தேர்தல் நடக்கவிருந்தது. தற்போது மீண்டும் கொரோனா வந்ததால், அத்தேர்தலை அக்டோபர் மாதம் தள்ளி வைத்துள்ளார் ஜெசிந்தா ஆர்டென். ‘மீண்டும் தேர்தலை தள்ளி வைக்கமாட்டேன். அக்டோபரில் நிச்சயம் நடக்கும்’ என்று கூறியிருக்கிறார்.