உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸால் சுமார் 190 நாடுகளில் இயல்பு நிலைமை முடங்கியுள்ளது. இதுவரை சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளாலேயே இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இத்தாலியில் மட்டும் 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். ஸ்பெயினில் இதுவரை 3 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு இரையாகிவிட்டனர். இவ்விரண்டு எண்ணிக்கையும் சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகமாகும்.
இதற்கு அடுத்தப்படியாக ஈரானில் சுமார் 2 ஆயிரம் பேரும், பிரான்ஸில் ஆயிரத்து 100 பேரும் கொரோனாவால் மடிந்துள்ளனர். அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரிட்டனில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலும் ஏராளமானோர் பலியாகிவிட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.