உலகெங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக 9 வாரங்கள் குறைந்து வந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் மட்டும் புதிதாக 30 லட்சம் தொற்றுகள் பதிவானதாகவும் முந்தைய வாரத்தை விட இது 10 சதவிகிதம் அதிகம் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட இறப்புகளும் கடந்த வாரம் 3 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில்தான் அதிகளவில் தொற்று பதிவாவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸ்தான் தொற்று அதிகரிக்க முக்கிய காரணம் என்றும் தற்போது இந்த வைரஸ் 111 நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
நெருக்கடி காரணமாக பல நாடுகள் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருவதாகவும் ஆனால் இது தொற்று பரவலை நிச்சயம் அதிகரிக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.