கொரோனா எதிரொலியாக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஈபிள் கோபுரத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த பாதிப்பால் உலகமெங்கும் 5000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் அந்தந்த நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யபட்டுள்ளன. மேலும் மக்கள் கூடும் பொது இடங்ளிலும் அவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரான்சில் கொரோனா தொற்று எதிரொலியாக புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தை பார்வையிட தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பில் 61 பேர் உயிரிழந்தனர். மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நூறுக்கும் அதிகமானோர் ஓரிடத்தில் கூடுவதற்கு பிரான்ஸ் அரசு ஏற்கெனவே தடை விதித்திருந்தது.
அந்த வகையில் தலைநகர் பாரிசில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலத்தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது. கோபுரத்தின் மீது ஏறி பார்வையிடவும் அந்தப் பகுதியில் திரளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பாரிசில் உள்ள மியூசியம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளன. மீண்டும் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.