அமெரிக்காவில் இனவாதத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொலம்பஸ் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் சிக்கி இருந்த அமெரிக்கா தற்போது ஜார்ஜ் பிளாய்டின் மரணத்திற்கு நீதி வேண்டிக் கொதிக்கிறது. அமெரிக்காவின்
வெள்ளைக் காவல் அதிகாரி ஒருவர் தனது முட்டியால் கழுத்தை அழுத்தி ஜார்ஜ் பிளாய்டின் உயிரைப் பறித்தார். ''மூச்சு விட முடியவில்லை;
கொலை செய்துவிடாதீர்கள்'' என்று பிளாய்ட் அபயக்குரல் எழுப்பியும் அவரை அதிகாரி விடுவிக்கவில்லை. இந்தக் கொடூர கொலைக்கு நீதி
வேண்டி அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது கறுப்பின மக்களுக்கு எதிரான மனநிலையின் உச்சம் என அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வயது வித்தியாசமின்றி அமெரிக்க மக்கள் ஜார்ஜ் பிளாய்டின் உயிருக்குப் பதில் கேட்டு வருகின்றனர். இதனால் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கலவரம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் போஸ்டனில் உள்ள கிறிஸ்டோபர் கொலம்பஸின் சிலையின் தலை தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது. காலனிய ஆதிக்கத்தின் அடிமைத்தனத்தினை நினைவு கூரும் சிற்பங்கள் தொடர்ச்சியாகப் போராட்டக்காரர்கள் தகர்த்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே இந்தச் சிலை தகர்ப்பும் நடந்துள்ளது.
இதே போல மியாமி நகரத்திலும் கொலம்பஸ் சிலை தகர்க்கப்பட்டது. முன்னதாக வெர்ஜீனியாவின் ரிச்மண்டில் உள்ள கொலம்பஸ் சிலையை மக்கள் தகர்த்து ஏரிக்குள் கொண்டு வீசியுள்ளனர். 1492 காலகட்டத்தில் கொலம்பஸ் ஒரு புதிய உலகத்தினை கண்டுபிடித்ததாக அமெரிக்க பாடப்புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்ற போராட்டத்தின் போது வாஷிங்டனில் இந்தியத் தூதரகத்தின் வெளியே இருக்கும் மகாத்மா காந்தி சிலையும் சேதப்படுத்தப்பட்டது. அதற்காக இந்தியாவிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.