இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் காதலியால், அந்நாட்டு பிரதமரின் அலுவலக பிரமுகர்கள் அதிகாரப் போரில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் நீண்ட கால உதவியாளர் டொமினிக் கம்மிங்ஸிவர். இவர் தனது உதவியாளர் பணியை ராஜினாமா செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முன்பாக, இவருக்குக் கீழ் நிலையில் பணிபுரிந்த லீ கெயின் என்பவர் பிரதமர் அலுவலகப் பொறுப்பில் இருந்து திடீர் ராஜினாமா செய்தார்.
இந்த வாரம் லீ கெயினுக்கு போரிஸ் பதவி உயர்வு கொடுக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீர் ராஜினாமா செய்தார். இது இங்கிலாந்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. பிரதமரின் உதவியாளர்கள் ராஜினாமா குறித்து தற்போது அங்கு காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கெல்லாம் காரணமாக இங்கிலாந்து ஊடகங்கள் கை காட்டுவது போரிஸ் ஜான்சனின் காதலி கேரி சைமண்ட்ஸைதான். இந்த கேரிக்கும் டொமினிக்கிற்க்கும் இடையேயான பனிப்போரை இத்தனை பிரச்னைக்கும் ஆரம்பப் புள்ளி. போரிஸ் ஜான்சனின் இல்லத்தில் இவர்களுக்கான அலுவலகம் இருந்து வருகிறது.
இவர்களின் பனிப்போரால் கேரி அணி - டொமினிக் கம்மிங்ஸ் அணி என இரு பிரிவாக அவர்கள் இல்லத்தில் செயல்பட்டு வருகிறார்கள். போரிஸின் காதலி கேரிக்கும் ராஜினாமா செய்த லீ-க்கும் கருத்து மோதல் மிகுதியாக இருந்த நிலையில், லீயை கேரியின் எதிர்ப்பை மீறி பிரதமர் அலுவலக பதவியில் அமர்த்தியிருக்கிறார் டொமினிக்.
கேரி அணியை சேர்ந்தச் ஊடக செயலரான அலெக்ரா ஸ்ட்ராட்டன் என்பவருக்கும் மூத்த உதவியாளரான முனிரா மிர்ஸா என்பவருக்கும் லீ இருப்பது பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு இவர்கள் இருவரும், லீயுடன் சண்டையிட்டுள்ளனர். அதிலும், அலெக்ரா லீயுடன் நேரடியாக சண்டையிட்டு, "லீக்கு கீழ் வேலை பார்க்க முடியாது, எதுவானாலும் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தான் நேரடியாக தெரிவிப்பேன்" என்று போர்க்கொடி தூக்கிய சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளது. இதற்கு கேரி அனுமதி கொடுத்தும் பகையை வளர்த்திருக்கிறார்.
இப்படி போரிஸ் அலுவலகத்தில் மோதல்கள் வெளிப்படையாகவே நடந்து வந்துள்ளன. இதற்கிடையே, பிரதமரின் ஆலோசகர்களால் பிரதமருக்கு சரியான ஆலோசனை கொடுக்கப்படவில்லை என்று சமீபத்தில் லீயை குறிவைத்து புகார் கூறினார் கேரி. அவரின் இந்தப் புகார் தன்னை அவமதிப்பது போல் இருந்ததாக கருதிய லீ, தொடர் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி கொடுக்க வேண்டும் என எண்ணியே பதவியை ராஜினாமா செய்தார் என இங்கிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன.
மேலும், லீயை போலவே தற்போது டொமினிக்கும் பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. எனினும், தனது நீண்டகால உதவியாளரான டொமினிக்கை அப்படி ஒரு முடிவை எடுக்க போரிஸ் விட மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.