தென் ஆப்ரிக்க விமான ஓட்டுநரான ருடால்ஃப் எராஸ்மஸ் என்பவர், விமானத்தின் நடுப்பகுதியில் விஷ பாம்பொன்று (Cape Cobra - இவ்வகை பாம்புகள் கடித்தால், 30 நிமிடங்களில் அந்நபர் உயிரிழக்ககூடும் என சொல்லப்படுகிறது) இருப்பதை அறிந்து, அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார். துரிதமான அவரது நடவடிக்கையை கண்டு, விமான அதிகாரிகள் அவரை பாராட்டி உள்ளனர். சிறிய ரக விமானமான அதில், 4 பேர் மட்டுமே பயணித்துள்ளனர். Worcester முதல் Nelspruit வரை பயணித்திருக்கிறார்கள் இவர்கள்.
கடந்த 5 வருடங்களாகவே விமானம் ஓட்டும் ருடால்ஃப், இந்த பயணத்தின்போது தன் இருக்கைக்கு கீழே கோப்ரா நெளிவதுபோல முதலில் உணர்ந்திருக்கிரார். தொடர்ந்து அதை உறுதிபடுத்தியிருக்கிறார். இதைத்தொடர்ந்தே, அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகங்களுக்கு பேசியுள்ள அவர், “கடந்த திங்கள்கிழமை, விமானத்தை எடுக்கும் முன்பு செய்யப்படும் வழக்கமான சோதனையின்போதுதான் இது நடந்தது.
முன்னதாக வொர்செஸ்டர் விமானநிலையம் மூலமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், விமான இறக்கைக்கு அடியில் ஒரு பாம்பு கிடப்பதைக் கண்டதாக எங்களிடம் கூறியிருந்தார்கள். அப்போதே அவர்கள் அதை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் எதிர்பாராவிதமாக அது தப்பியுள்ளது. பின் அது இன்ஜினுக்குள் புகுந்துள்ளது. ஆனால் அது விமானத்திலிருந்து சென்றுவிட்டதாக நினைத்து, விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
விமான இறக்கையிலிருந்து அந்த விஷப்பாம்பு, சீட்டுக்கு வந்துள்ளது. நான் எப்போதும் பயணத்தின்போது வாட்டர் பாட்டில் கொண்டு செல்வது வழக்கம். அதை கால்களுக்கு கீழே வைப்பேன். அப்படி அன்றும் எடுத்து சென்று வைக்க முயன்றபோது என் கைப்பிடியில் குளிர்ச்சியான உணர்வொன்று ஏற்படுவது போல உணர்ந்தேன். முதலில் என் பாட்டிலில் இருந்து தண்ணீர் சொட்டுகிறது என்றுதான் நினைத்தேன்.
அப்படி நினைத்துக்கொண்டு, என் இடதுபக்கம் திரும்பி கீழே பார்த்தபோது, என் காலுக்கு கீழே பாம்பு இருப்பதை உணர்ந்தேன். நான் அதை உணர்ந்தபோது சுமார் 11,000 அடி மேலே இருந்தது விமானம். முதலில் என்ன நடக்கிறதென்றே எனக்கு புரியவில்லை
அந்த நொடியில், நான் கூச்சலிட்டு விமானத்தில் பாம்பிருப்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்தி, அவர்களையும் பதற்றப்படுத்த விரும்பவில்லை. அதனால் அமைதியாக இருந்தேன். ஆனால், எப்படியும் அவர்களுக்கு தெரிந்துதானே ஆகவேண்டும் என்ற உணர்வும் எனக்குள் இருந்தது.
அதனால் சற்று அமைதிகாத்து பின் அவர்களிடம் ‘எல்லோரும் கொஞ்சம் கவனமாக கேளுங்கள். இந்த விமானத்தில் பாம்பு இருக்கிறது. என் இருக்கைக்கு கீழே அது இருப்பது போல நான் உணர்கிறேன். ஆகவே நான் இப்போது எவ்வளவு விரைந்து முடியுமோ, அவ்வளவு விரைந்து விமானத்தை தரையிறக்க போகிறேன்’ என்று சொன்னேன்.
தொடர்ந்து அதை துரிதமாக செய்தேன். ‘விரும்பதகாத ஒரு பயணி இந்த விமானத்தில் இருக்கிறார்’ என்று அடுத்த வந்த விமான தளத்துக்கு (Welkom) தகவல் கொடுத்துவிட்டு தரையிறங்கியிருந்தேன். தரையிறக்கியவுடன் அனைவரும் பாதுகாப்பாகவும் வேகவேகமாகவும் இறங்கினர்.
முதலில் என் இருக்கைக்கு பின் இருந்த இருவரும், முன் இருந்த ஒருவரும் அடுத்தடுத்து இறங்கினர். பின்னரே நான் இறங்கினேன். பின் தேடிப்பார்த்தபோது, பாம்பு என் சீட் அடியே இருந்தது தெரியவந்தது. பின் பாம்பு மீட்பவர்களை அழைத்தோம். ஆனாலும் அன்று பாம்பை பிடிக்கமுடியவில்லை” என்றுள்ளார்.
பாம்பு மீண்டும் விமானத்தின் உள்ளே புகுந்துவிட்டதாக பாம்பு பிடிக்க வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். விரைந்து அதை பிடிக்கும் முயற்சியில் அவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.