பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலையின் பின்னணியில் சவுதி பட்டத்து இளவரசருக்கு தொடர்பு இருக்கலாம் என அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ கருதுகிறது.
சவுதி மன்னர், சல்மானின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் எழுதி வந்தவர், ஜமால் கஷோகி (59). தனது காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக அக்டோபர் 2 ஆம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல் சென்றிருந்தார். அப்போது முதல் மனைவியை விவகாரத்து செய்ததற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக, இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்றார்.
உள்ளே சென்றவர் திரும்பி வரவில்லை. அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. அதை மறுத்த சவுதி அரசு, பின்னர் அவருக்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் ஏற்பட்ட மோதலில் கஷோகி இறந்ததாக கூறியது. பின்னர் அவர் கொல்லப்பட்டது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டது சவுதி.
கஷோகியின் உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து ஐந்து சூட்கேஸ்களில் எடுத்துச் செல்லப் பட்டது என்றும் சவுதி தூதரக அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த கிணற்றில் அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் கஷோகியை கொலை செய்யுமாறு சவுதி பட்டத்து இளவரசர் மொகமது பின் சல்மான் உத்தரவிட்டிருக்க வாய்ப்புள்ளதாக, அமெரிக்க அரசின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ கருதுகிறது.
இளவரசர் சல்மானுக்கும் கஷோகி கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சவுதி மறுத்து வந்த நிலையில் சிஐஏவின் இந்த கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து வெள்ளை மாளிகையும், அமெரிக்க அரசுத் துறையும் கருத்து கூற மறுத்துவிட்டன. வாஷிங்டனில் உள்ள சவுதி தூதரக செய்தித் தொடர்பாளர், ’சி.ஐ.ஏ வின் இந்த கணிப்பு தவறானது என்று மறுத்துள்ளார்.