கிறிஸ்துமஸுக்கு மறுநாள் வருவது பாக்சிங் டே. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் வரும் முதல் வேலை நாளன்று, கடைநிலை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. தபால்காரர்கள், பத்திரிக்கை விநியோகம் செய்யும் சிறுவர்கள், வீட்டுப் பணியாளர்களின் சேவையை பாராட்டி, அவர்களது எஜமானர்கள் வெகுமதி அளித்து வந்தனர்.
இதேபோல தென்ஆப்ரிக்காவிலும் 1980 ஆம் ஆண்டு முதல் பாக்சிங் டே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான நேரங்களில், பலர் தூங்கி எழும்பும் முன்னே, பேப்பர் போடுபவர்களும், இறைச்சி விநியோகிப்பவர்களும் அவர்களது வீட்டு வாசலில் வைத்து விட்டு சென்று விடுவர். இதுவரை நேரில் காணாமல் தங்களுக்கு சேவை வழங்குவோரை நேரில் கண்டு வெகுமதி வழங்குவார்கள்.
இந்த நிகழ்வுகள்தான் இன்றளவும் இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் பாக்சிங் டே ஆக அனுசரிக்கப்படுகிறது. இன்றளவும், பல தேவாலயங்களில் அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டு, அதில் வெகுமதிகள் வைக்கப்பட்டு ஏழை எளியோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன மேலும், பாக்சிங் டே நாளில் பெரும்பாலான பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால், பல இடங்களில் குதிரைப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாகவே இன்றளவும், ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.