இஸ்ரேலும், பாலஸ்தீனமும் இருவேறு துருவங்களாக இருக்கும் நிலையில், யூதரையும், இஸ்லாமியரையும் கொரோனா வைரஸ் தாக்கம் ஒருங்கிணைத்துள்ளது.
கொரோனா வைரஸால் எண்ணற்ற நாடுகள் ஒருபுறம் பாதிக்கப்பட்டிருந்தாலும், மறுபுறம் காற்று மாசு வேகமாக குறைந்து வருகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தற்போது பிற உயிரினங்கள் உலவி, இந்த பூமி தங்களுக்கும் சொந்தம் என்பதை நிரூபித்து வருகின்றன. இயற்கை தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், மத ரீதியான பாகுபாடுகளும் மறைந்து வருகின்றன. அதற்கு ஒரு உதாரணமான காட்சிகள் ஜெருசலேம் நகரில் நடந்திருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் மருத்துவமனையில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவ்ரஹம் மின்ட்சும், ஜோஹர் அபுவும், அவரவர் மத வழக்கப்படி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸை சாலையில் ஓரமாக நிறுத்தி விட்டு, யூதரான மின்ட்ஸ் ஜெருசலேமை பார்த்தபடியும், இஸ்லாமியரான அபு மெக்காவை பார்த்தபடியும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மருத்துவ பணியாளர்களாக வாரத்திற்கு மூன்று முறை இருவரும் ஒன்றாக பணியாற்றுவதால், இருவரின் கூட்டுப் பிரார்த்தனையும் புதிது அல்ல என்றாலும், கொரோனா வைரஸ் பரவி வரும் இந்தத் தருணத்தில், ஒருங்கிணைந்த இந்தப் பிரார்த்தனை மதங்களை கடந்த மனிதாபிமானத்தை பலரது நெஞ்சங்களிலும் உணர வைத்திருக்கிறது.