நியூசிலாந்து நாட்டின் மசூதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் வீடியோவை மீண்டும் பரப்பியதற்காக ஒருவருக்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்திலுள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் இருக்கும் இரண்டு மசூதியில் கடந்த மார்ச் மாதம் பயங்கரவாதி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலை நடத்தியவர் ஃபேஸ்புக்கில் இதனை லைவ் ஆக தனது பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோவை தாக்குதல் நடைபெற்ற 29ஆவது நிமிடம் ஃபேஸ்புக் நிறுவனம் தனது தளத்திலிருந்து நீக்கியது. இந்த வீடியோவை அப்போது 200 பேர் மட்டுமே பார்த்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தாக்குதல் வீடியோவை மீண்டும் ஃபேஸ்புக்கில் பதிவிட முயற்சித்துள்ளனர். எனினும் ஃபேஸ்புக் நிறுவனம் இதை அனுமதிக்கவில்லை.
தாக்குதல் வீடியோவை நியூசிலாந்து அரசு ஆட்சேபனைக்குரிய வீடியோ என்று அறிவித்திருந்தது. ஆனால் பிலிப் நெவில் என்பவர் இந்தப் பயங்கரவாத தாக்குதல் வீடியோவை 30 பேருக்கு அனுப்பியுள்ளார். நியூசிலாந்து நாட்டின் சட்டத்தின்படி ஆட்சேபனைக்குரிய வீடியோவை ஒருவர் மற்றொரு நபருக்கு அனுப்பினால் 14 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
இதனையடுத்து மசூதி தாக்குதல் வீடியோவை பரப்பியதாக நெவில் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தாக்குதல் வீடியோவை நெவில் பரப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளதால் அவருக்கு 21 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து நெவில் சிறையில் அடைக்கப்பட்டார்.