சீனாவில் 2 கருப்பைகளைக்கொண்ட பெண் ஒருவர், இரண்டு கருப்பையிலிருந்தும் தலா ஒரு குழந்தை என மொத்தம் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்திருப்பது மருத்துவ உலகின் கவனத்தை பெற்றுள்ளது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட்யின்படி, சீனாவின் வடமேற்கு பகுதியை சேர்ந்தவர் லி என்ற பெண்.. இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் ஷாங்கி மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. குழந்தை பிறந்தது சிறப்பு என்றால், அதிலும் சிறப்பு இப்பெண்ணுக்கு இரண்டு கருப்பையிலிருந்து குழந்தைகள் பிறந்துள்ளது என்பதுதான்.
காரணம்: இவர் உலகளவிலேயே 0.3 சதவீதம் பெண்களை மட்டுமே பாதிக்கும் அரிய வகையான கருப்பை டிடெல்ஃபிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் முன்னதாகவே தெரிவித்திருந்துள்ளனர்.
இதன்படி, லிக்கு முழுமையாக வளர்ச்சி அடைந்த இரண்டு கற்பபைகள் இருந்துள்ளது. இந்த இரண்டு கற்பபைகளிலும் தலா ஒரு குழந்தை என மொத்தம் இரண்டு குழந்தைகள் வளர்ந்து வந்துள்ளது.. இந்தநிலையில்தான், சுகப்பிரசவ முறையிலேயே இவருக்கு இரண்டு கருப்பையிலிருந்து ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது.
மேலும், எட்டரை மாதத்திலேயே டெலிவெரி நடந்துள்ளது என்பது இன்னும் தனித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து அம்மருத்துவமனையின் மூத்த மகப்பேறு மருத்துவர் காய் யிங் தெரிவிக்கையில், “இப்படி மில்லியனில் ஒருவருக்குத்தான் நடக்கும். இயற்கையான கருத்தரிப்பின் மூலம், இரண்டு கருப்பைகளிலிருந்து ஒவ்வொரு குழந்தைகளை பெற்றெடுத்திருப்பது மிகவும் அரிதான நிகழ்வு. இது போன்ற இரண்டு நிகழ்வு மட்டுமே நடந்திருக்கிறது என கேள்விப்பட்டிருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் மருத்துவ உலகில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியயோடு, சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளான ஒன்றாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.