சீனா: 2 வயதில் கடத்தப்பட்ட சிறுவன்... மகனைத் தேடி ஒரு தந்தையின் 24 வருட துயர்மிகு பயணம்

சீனா: 2 வயதில் கடத்தப்பட்ட சிறுவன்... மகனைத் தேடி ஒரு தந்தையின் 24 வருட துயர்மிகு பயணம்
சீனா: 2 வயதில் கடத்தப்பட்ட சிறுவன்... மகனைத் தேடி ஒரு தந்தையின் 24 வருட துயர்மிகு பயணம்
Published on

சீனாவில் 2 வயதில் காணாமல் போன தனது மகனை பல போராட்டங்களினூடே 24 வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளார் ஒரு தந்தை. அந்த தந்தையின் தேடுதல் பயணம் ஒரு பாச போராட்டமாகவே கேட்பவர்களை கண்கலங்க வைப்பது போலவே உள்ளது.

2015ஆம் ஆண்டு வெளியான Lost and Love திரைப்படம் நம்மில் பலருக்கும் ஞாபகம் இருக்கும். அந்த திரைப்படத்தில் காணாமல்போன தனது மகனை தந்தை தேடி அலைவார். ஆனாலும் கடைசியில் அவரால் கண்டுபிடிக்கமுடியாது. ஒரு தந்தையின் வேதனையை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி இருக்கும் அந்த திரைப்படத்தை பார்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் வந்திருக்கும். அதேபோன்றதொரு நெகிழ்ச்சிகரமான சம்பவம் சீனாவில் தற்போது நடந்தேறியுள்ளது. கடைசியில் தனது மகனை கண்டுபிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கருத்து தெரிவித்த பலருக்கும் இந்த உண்மை சம்பவம் சற்று ஆறுதல் அளிக்கும்.

ஆம். 2 வயதில் காணாமல் போன தனது மகனை பல போராட்டங்களினூடே 24 வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளார் ஒரு தந்தை. 1997ஆம் ஆண்டு ஷாண்டோங் மாகாணத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஜின்ஷேன் என்ற 2 வயது சிறுவனை கடத்தல்காரர்கள் கடத்திச் சென்றுள்ளனர். அதன்பிறகு சிறுவனின் தந்தை குவோ கேங்டாங் தனது மகனைத் தேடி அலைந்திருக்கிறார்.

தனது வாழ்க்கை முடிவதற்குள் எப்படியாவது தனது மகனை கண்டுபிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் காணாமல்போன சிறுவனின் புகைப்படம் பொறித்த கொடியுடன் 24 வருடங்களாக பைக்கிலேயே கிட்டத்தட்ட 5 லட்சம் கிலோமீட்டர்கள் பயணம் செய்திருக்கிறார் குவோ. இதுவரை 10 பைக்குகளை வாங்கிய குவோவிற்கு பலமுறை ஏற்பட்ட விபத்துகளால் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இருந்தாலும் விடாமுயற்சியுடன் சீனாவில் காணாமல்போனவர்களை தேடும் குழுவில் தன்னை இணைத்துக்கொண்டு தேடி அலைந்திருக்கிறார்.

கடைசியாக சீன பாதுகாப்பு நலவாரியத்தின் உதவியுடன் டி.என்.ஏ சோதனைமூலம் தனது மகன் மத்திய சீனாவில் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார். குவோ தனது மகன் ஜின்ஷேனை கட்டியணைத்து அழும் வீடியோக்கள் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஹூ என்ற ஆணும் டேங் என்ற பெண்ணும் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஜின்ஷேனை கடத்திச்சென்று ஹேணான் மாகாணத்தில் விற்றது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஜின்ஷேனை கடத்தி விற்ற 2 பேரை சீனப் போலீசார் கண்டுபிடித்து தற்போது கைது செய்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com