மின்சார காரை இயக்கும் திறன் கொண்ட பேட்டரி கொண்டு, 5,000 ஸ்மார்ட்ஃபோன்களை சார்ஜ் செய்யும் வகையில், மிகப்பெரிய பவர் பேங்க்கை சீனாவைச் சேர்ந்தவர் உருவாக்கி அசத்தியுள்ளார்.
பயணத்தின்போது ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப் போன்ற மின்சார சாதனங்களில், மின்சாரம் தீர்ந்துபோகும்போது, நாம் பவர் பேங்கை பயன்படுத்தி ஜார்ஜ் செய்து வருகிறோம். அந்த வகையில் தற்போது 10000 mAh, 20000 mAh திறன்கொண்ட பவர் பேங்குகளை நாம் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த யூ-டியூபரும், வெல்டிங் கைவினை கலைஞருமான ஹேண்டி கெங் என்பவர் 27,000,000 mAh திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய பவர் பேங்கை கண்டுபிடித்துள்ளார்.
இந்த பவர் பேங்க்கைக் கொண்டு 3000 mAh பேட்டரி கொண்ட சுமார் 5 ஆயிரம் ஸ்மார்ட்ஃபோன்களை சார்ஜ் செய்ய முடியும் என்றும் ஹேண்டி கெங் தெரிவித்துள்ளார். தனது வெல்டிங் திறன்களை பயன்படுத்தி, மின்சார காரை இயக்கும் திறன் கொண்ட பேட்டரி கொண்டு, 5.9x3.9 அடி அளவு கொண்ட பவர் பேங்கை உருவாக்கியுள்ளார் ஹேண்டி கெங். இதில் மொத்தம் 60 போர்ட்கள் உள்ளன. இந்த பவர் பேங்க், 220 வோல்ட் எலெக்ட்ரிக் வோல்டேஜ் அவுட்புட் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
மேலும், இந்த பவர் பேங்க் கொண்டு டி.வி., வாஷிங் மெஷின், எலக்ட்ரிக் குக்கர் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளிட்டவைகளையும் பயன்படுத்திட முடியும். இதனை எளிதில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல ஏதுவாக பவர் பேங்கில், சக்கரங்களை பொருத்தி இருக்கிறார் ஹேண்டி கெங். தன் சேனலில் தொடர்ந்து ஏதாவது புது முயற்சிகளை செய்துகொண்டிருப்பரான ஹேண்டி கெங், அண்மையில், பியானோ வடிவிலான பார்பிக்குயூ தயார் செய்யும் புதுமையான இயந்திரம் மற்றும் சக்கர நாற்காலி கொண்டு களையெடுக்கும் இயந்திரம் ஆகியவற்றை செய்து பலரின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
ஹேண்டிங் கெங் வெளியிட்ட காணொலியில் ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப் மற்றும் எலக்ட்ரிக் சைக்கிள் என அனைத்தையும் சார்ஜ் செய்து காண்பித்திருந்தார். தனது அனைத்து நண்பர்களிடமும் தன்னை விட பெரிய பவர் பேங்க்குகள் இருப்பதைப் பார்த்தப் பிறகு, அதைவிட பெரிய பவர் பேங்கை உருவாக்கும் யோசனை வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பவர் பேங்க் எப்படி உருவாக்கப்பட்டது என்ற வீடியோவையும் அவர் யூ-டியூபில் வெளியிட்டுள்ளார்.
<iframe width="850" height="478" src="https://www.youtube.com/embed/-oilA8nLfsk" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>