சீனாவில் அண்மையில் நடந்த விமான விபத்து, விமானி ஒருவரால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 132 பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து கடந்த மார்ச் 21-ம் தேதி புறப்பட்டு குவாங்சோ நோக்கி சென்றது. இந்நிலையில், மதியம் 1.30 மணிக்கு குவாங்ஸி பிராந்தியத்தில் உள்ள ஊசோவ் நகருக்கு மேலே பறந்த போது, திடீரென அந்த விமானத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ஊசோவ் நகரின் டெங்க் என்ற கிராமப் பகுதியில் இருக்கும் மலைப்பிரதேசத்தில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விமானம் மோதி வெடித்ததில் அங்கிருக்கும் வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
சீனாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விமான விபத்து குறித்து போலீஸாரும், விமான நிபுணர்களும் விசாரணை மேற்கொண்டனர். அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்களும் அங்கு சென்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து, விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், வேண்டுமென்றே இந்த விமான விபத்து நிகழ்த்தப்பட்டிருப்பதாக அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "விமானம் 29,000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த போது அது தனது பாதையில் இருந்து சற்று விலகியிருக்கிறது. இதனை கவனித்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், அவர்களுக்கு காக்பிட்டில் (விமானிகள் அறை) இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், காக்பிட்டில் உள்ள தொலைபேசி கருவிகள் செயல்பாட்டில்தான் இருந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், விமான எஞ்சினிலும் எந்தக் கோளாறும் இல்லை. இதனால், விமானிகளில் ஒருவர்தான் வேண்டுமென்றே இந்த விபத்தை நிகழ்த்தியிருக்கலாம் என கருத வேண்டியுள்ளது" என்றனர்.
இதுதொடர்பாக ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "குறிப்பிட்ட விமானத்தை இயக்கிய விமானிகள் இருவரும் நல்ல மனநலம் மற்றும் உடல்நலத்துடன்தான் இருந்தனர். அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் எந்தப் பிரச்னையும் இருந்ததாக தெரியவில்லை. இந்த விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாக உடனடியாக நம்மால் முடிவுக்கு வர முடியாது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றார்.