சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த யாரும் உயிருடன் இருப்பதாக கண்டறியப்படவில்லை என்றும், எனவே உள்ளே இருந்த 132 பேரும் உயிரிழந்திருக்க கூடும் என்றும் அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஒரு விமானம் 132 பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கிச் சென்றது. அப்போது குவாங்ஸி மாகாணத்தில் மலைப்பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் அப்பகுதியே கடும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதைத் தொடர்ந்து மீட்பு படையினர் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. விபத்து நடந்து 18 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் உயிருடன் இருப்பவர்கள் யாரும் கண்டறியப்படவில்லை என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த 123 பேரும் விமானி உள்ளிட்ட 9 ஊழியர்களும் இறந்திருக்கலாம் என்றும் சீன அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சீனாவில் விமான விபத்து ஏற்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து போயிங் 737 ரக விமானங்களையும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் கூடுதல் கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்றும் சூழ்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக விமான போக்குவரத்து இயக்குநர் அருண் குமார் கூறியுள்ளார். இடைப்பட்ட காலத்தில் 737 ரக விமானங்களை கூடுதல் கண்காணிப்பில் கொண்டுவந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட், விஸ்டாரா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமான நிறுவனக்கள் போயிங் 737 ரக விமானங்களை பயன்படுத்தி வருகின்றன.