காதலிக்கும் பலருக்கும் அது கல்யாணத்தில் முடிவதில்லை. புரிதலின்மை, பெற்றோர் எதிர்ப்பு, ஏமாற்றம் என ப்ரேக் அப்பிற்கு பல காரணங்கள் இருக்கும். ஆனால் காதலன் வீட்டில் தனக்கு பிடிக்காத உணவை பரிமாறியதால் ப்ரேக் அப் செய்துள்ளார் ஒரு பெண். சீனாவில் முதன்முதலில் காதலன் வீட்டிற்கு சென்றபோது பிடிக்காத உணவை பரிமாறியதால் ஆத்திரத்தில் காதலை ப்ரேக்- அப் செய்துள்ளார் காதலி.
தனது இருபதுகளில் உள்ள பெண் ஒருவர் முதன்முதலாக தனது காதலன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியும் உள்ளார். மிகவும் நடுக்கத்துடன் காதலன் வீட்டிற்கு சென்ற அவருக்கு காதலனின் பெற்றோரால் மிகுந்த ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. அதனை பதிவாக தனது சமூக ஊடகத்தில் இட்டுள்ளார் அவர். தனக்கு பரிமாறப்பட்ட உணவை வீடியோவாகவும் பகிர்ந்துள்ளார். அதில், “எனது காதலனின் குடும்பத்துடன் உணவருந்த அமர்ந்தபோது அன்கு வைக்கப்பட்டிருந்த உணவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொரித்த முட்டைகளுடன் நூடுல்ஸ், பூசணீ போரிட்ஜ், வறுத்த குளிர் உணவுகள் போன்றவையே இடம்பெற்றிருந்தன. இவை சீனாவில் சாப்பிடப்படும் அன்றாட உணவேயாகும். முதன்முறை காதலன் வீட்டிற்கு தங்க சென்றிருந்தும் தனக்கு ஸ்பெஷலாக எதுவுமே செய்யவில்லை என்பதை பார்த்து மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார் அந்த பெண். இதுகுறித்து காதலனிடம் கேட்டபோது, “ஒரு சாதாரண மனிதன் தினசரி சாப்பிடும் உணவு இது என்று கூறினான். எனக்கு நூடுல்ஸ் பிடிக்காது என்று அவனுக்கு நன்றாக தெரியும். ஆனால் தினமும் அதையே கொடுத்தனர்” என்றும் கூறியுள்ளார்.
இரண்டு நாட்கள் காதலன் வீட்டில் இருந்தபிறகு, காதலை ப்ரேக் அப் செய்யலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார். அந்த குடும்பத்துடன் அதற்குமேல் வாழமுடியாது என்று முடிவெடுத்து எனது பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நெட்டிசன்கள் கூறுகையில், “திருமணத்திற்கு முன்பே, அந்த குடும்பம் தன்னை நன்றாக பார்த்துக்கொள்ளாது என்ற நிதர்சனத்தை புரிந்துகொண்டதற்கு அவர் நன்றி சொல்லவேண்டும்”, “அவருடைய குடும்பம் வசதிபடைத்ததா அல்லது ஏழையா என்பது குறித்து நாம் பேசவேண்டாம். ஆனால் உங்களை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை”, “அந்த பெண்ணை பெற்றோருக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம்” என்று கமெண்ட் செய்துள்ளனர்.