தோக்லாம் எல்லை விவகாரம்… அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா

தோக்லாம் எல்லை விவகாரம்… அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா
தோக்லாம் எல்லை விவகாரம்… அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா
Published on

இந்தியா - சீனா இடையிலான தோக்லாம் எல்லை விவகாரத்தில் தலையிட்டு அமெரிக்கா ஆதாயம் அடைய முயற்சி செய்வதாக சீன அரசு ஊடகம் குற்றம்சாட்டியுள்ளது. 

சிக்கிம் மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள தோக்லாம் பகுதிக்கு சீனா உரிமை கோரிவருகிறது. இந்தியா-சீனா-பூடான் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியாக அமைந்திருக்கும் தோக்லாம் பீடபூமி பகுதியில் இந்தியா மற்றும் சீனா ராணுவப் படைகளைக் குவித்து வருவதால் இருநாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில், இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்னை தொடங்கி 5 வாரங்களாகிவிட்ட நிலையில், இரு நாடுகள் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட விரும்புவதாக குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா குறித்து அந்த பத்திரிகை இவ்வாறு விமர்சித்துள்ளது. 

இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுமே போருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்று கூறியுள்ள குளோபல் டைம்ஸ், இந்த விவகாரத்தில் தலையிட்டு அமெரிக்கா ஆதாயம் அடைய விரும்புவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்கா தலையிடுவதால், தோக்லாம் எல்லைப்பகுதி தொடர்பான நிலைப்பாட்டை சீனா மாற்றிக்கொள்ளாது என்றும், தனது சொந்த பகுதியை பாதுகாப்பதில் இருந்து பின்வாங்காது என்றும் அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தோக்லாம் விவகாரத்தை அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப்பின் கருத்துகளுக்கும் குளோபல் டைம்ஸ் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. பிஷப்பின் இந்த அழைப்பு பிரச்னையின் தீவிரத்தை குறைப்பதாகவும், இந்தியாவுக்கு ஆதரவான அவரது நிலைப்பாட்டை காட்டுவதாகவும் அது தெரிவித்துள்ளது. 
இந்தியா-சீனா இடையில் போர் நடைபெற சில மேற்குலக நாடுகள் விரும்புவதாகவும், அதன்மூலம் ராஜாங்கரீதியில் சில பயன்களைப் பெற அந்நாடுகள் முயற்சி செய்வதாகவும், அமெரிக்காவை அந்த பத்திரிகை சாடியுள்ளது. தென்சீனக் கடல்பகுதி விவகாரத்தில் அமெரிக்கா இதேபோன்றதொரு நிலைப்பாட்டையே எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com