’அழகிகளை நம்பாதீர்கள்’ - ஹோட்டல் அறையில் ஏமாந்த நபர்.. பறிபோன லேப்டாப்.. எச்சரிக்கை விடுத்த சீனா!

’அழகிகளை நம்பாதீர்கள்; அவர்கள் உளவாளிகளாக இருக்கலாம்’ என சீனா தன் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
model image
model imagefreepik
Published on

சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் கேளிக்கை இரவு விடுதியில் ஓர் அழகான பெண்ணைச் சந்தித்து அவர் அழகில் மயங்கியதாகவும், பின்னர் இதைக் கவனித்த வெளிநாட்டு உளவாளிகள் அமைப்பு அந்தச் சீன நபரைக் குறிவைத்து மிரட்டியதாகவும் அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதாவது, சீனாவில் அரசு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் லீ சி (Li Si) என்பவர், இரவு விடுதி ஒன்றிற்குச் சென்றுள்ளார். அங்கே, ’நீங்கள் எத்தனை அழகிய பெண்களை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. அதை நம்பி, லீ சி அந்தப் பெண்களுடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். அப்போது திடீரென சீருடை அணிந்த சில வெளிநாட்டவர்கள் உள்ளே நுழைந்து லீ சியை நிர்வாண கோலத்தில் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் அந்தப் புகைப்படங்களைக் காட்டி, அவரை மிரட்டியுள்ளனர்.

ஒருகட்டத்தில் அவர், அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க தனது லேப்டாப்பைக் கொடுத்து ஓடிவந்திருக்கிறார். அந்த லேப்டாப்பில் அவர் 10 ஆண்டுகளாகச் சேமித்திருந்த தரவுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதைக் குறிவைத்துத்தான் வெளிநாட்டு உளவு அமைப்புகள் அந்த லேப்டாப்பைக் கைப்பற்றி இருக்க வேண்டும் என சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் ’அழகிகளை நம்பி ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள், அவர்கள் உளவாளிகளாக இருக்கலாம்’ என சீன பாதுகாப்பு அமைச்சகம் அந்நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவிர, ’அழகிகளைத் தேடி அலைகிறீர்களா, ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள்’ என்ற வாசகம், அந்நாட்டுச் செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டு வைரலாக்கப்படுகிறதாம்.

சீனாவின் ரகசிய தகவல்களைத் திருடுவதற்கு, வெளிநாட்டு உளவாளிகள், அழகிகளை இதுபோன்ற செயல்களில் பயன்படுத்துவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com