கடலுக்குள் அணு ஆலையின் கழிவுநீரைத் திறந்துவிட்ட ஜப்பான்.. எதிர்க்கும் சீனா!

புகுஷிமா அனு ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பல கோடி லிட்டர் கதிரியக்க நீரை, சிறிதுசிறிதாக அடுத்த 30 ஆண்டுகளுக்கு முழுவதுமாக பசிபிக் பெருங்கடலுக்குள் செலுத்த ஜப்பானின் திட்டமிட்டுள்ளது. இதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜப்பான் அணுஆலை
ஜப்பான் அணுஆலைட்விட்டர்
Published on

ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை அந்நாட்டு அரசு கடந்த 24ஆம் தேதி முதல், பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றத் தொடங்கியது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ஜப்பானிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகளுக்கு சீனாவும், தென்கொரியாவும் தடை விதித்துள்ளன. ஹாங்காங்கும் விரைவில் தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகுஷிமா அணு உலையை சுற்றியுள்ள கடல்நீரில் கதிரியக்க அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சீன சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஜப்பான் ஏற்றுமதி செய்யும் மீன்களில், பாதிக்கும் மேல் இந்த இரு நாடுகளுக்குத்தான் செல்கிறது. அவற்றின் தடையால், ஜப்பானுக்கு சுமார் 8,500 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது. இதுபோன்ற எதிர்வினைகள் வரலாம் என்பதை எதிர்பார்த்தே, ஜப்பான் அரசும் மீனவர்களை காக்க வேறு மாற்றுத்திட்டத்தை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அணு உலைகளைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியேற்றிய பிறகு நடத்தப்பட்ட சோதனையில், புகுஷிமா அணுமின் நிலையத்திற்கு அருகே கடல்நீரில் எந்தவித கதிரியக்கமும் கண்டறியப்படவில்லை என்று ஜப்பானின் சுற்றுச்சூழல் அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்திய இந்தச் சோதனையில் ஆலைக்கு அருகில் உள்ள 11 இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்தச் சோதனையின் முடிவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கடல் நீர், மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் அடுத்த மூன்று மாதங்களுக்கு சோதனை முடிவுகள் வாரந்தோறும் வெளியிடப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜப்பானின் மீன்வளத் துறை அமைச்சகம் நேற்று (ஆக 26), வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அணு உலையைச் சுற்றியுள்ள நீரில் உள்ள மீன்களில் டிரிடியம் கண்டறியப்படவில்லை’ என்று கூறியுள்ளது.

இதனிடையே கழிவு நீரை கடலில் ஜப்பான் திறந்துவிட்டிருப்பதையடுத்து அந்நாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கு தொடர்ந்து தொலைபேசி மூலம் சீனா தொல்லை கொடுப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தொலைபேசி மூலம் அழைப்புகள் வருவதால், தாங்கள் வழக்கமாகச் செயல்பட முடியவில்லை என்று ஜப்பானிய நிறுவனங்களும் அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளன. சீனாவில் செயல்படும் ஜப்பானிய நிறுவனங்களும் இதேபோன்ற பிரச்னைகளை எதிர்நோக்குவதாக ஜப்பானின் மூத்த அதிகாரி இரோயூக்கி நமாசு தெரிவித்துள்ளார்.

‘அணு உலை கழிவு நீரைச் சிறிதுசிறிதாக பசிபிக் பெருங்கடலில் கலந்து நீர்த்துப்போகச் செய்துவிடலாம், அதனால் எந்தப் பாதிப்பும் வராது’ என்று கூறும் ஜப்பான், பசிபிக் பெருங்கடலில் உள்ள கதிரியக்கத்தின் அளவை தொடர்ந்து கண்காணிக்கவும், வெளிப்படைத்தன்மையை பராமரிக்கவும் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதை, பல அறிவியலாளர்களும் ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பும் ஏற்றுக்கொண்டபோதும் சீனாவும் சில விஞ்ஞானிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதுபோல், ஜப்பான் மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வாழும் மக்களும் அரசின் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். பசிபிக் பெருங்கடலில் கலப்பதன் மூலம் அதனை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என்ற ஜப்பானின் வாதத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். புகுஷிமா அணுஉலை கழிவுநீரை என்னதான் சுத்திரித்தாலும் அதில் ட்ரிட்டியம் மற்றும் கார்பன்-14 ஆகிய கதிரியக்கத் தனிமங்கள் இன்னும் ஆபத்தான அளவுக்கு இருப்பதாகவும், அவற்றை நீக்குவது மிகவும் கடினம் என்று சில விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.

ஜப்பான் நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மிகப்பெரிய சுனாமி அலைகளால் புகுஷிமா அணு உலைக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் அணு உலையின் மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் சேதமடைந்தன. இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய குளிரூட்டும் அமைப்புக்குள் கோடிக்கணக்கான லிட்டர் கடல்நீர் மற்றும் போரிக் அமிலம் செலுத்தப்பட்டது.

இதனால் ஏற்பட்ட கதிரியக்க கழிவு நீர் ஆயிரக்கணக்கான தொட்டிகளில் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேமிக்கப்பட்ட அந்த கழிவு நீரைத்தான் கடும் எதிர்ப்புகளை மீறி தற்போது ஜப்பான் அரசு கடலில் வெளியேற்றி வருகிறது. தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பல கோடி லிட்டர் கதிரியக்க நீரை, சிறிதுசிறிதாக அடுத்த 30 ஆண்டுகளுக்கு முழுவதுமாக பசிபிக் பெருங்கடலுக்குள் செலுத்துவதே ஜப்பானின் திட்டமாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com