நான்கு ஆயிரம் ஆபாச இணையதளங்களை சீன அரசு முடக்கியுள்ளது.
ஆபாச இணையதளங்கள் உள்ளிட்ட மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இணையதளங்களுக்கு எதிராக நாடு தழுவிய மூன்று மாத பிரச்சாரத்தை சீன அரசு மேற்கொண்டது. ஆபாச இணையதளங்கள் மற்றும் சட்டவிரோத வெளியீடுகளுக்கு எதிரான தேசிய அலுவலகம் சார்பில் இந்த பிரச்சாரம் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது.
அதாவது இணையதளங்களில் உள்ள நாவல்கள், கதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட பல்வற்றில் உள்ள தவறான தகவல்களுக்கு எதிராக இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் 230 நிறுவனங்களின் இணையதளங்களில் இருந்து மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் 1,47,000 தகவல்கள் நீக்கப்பட்டது.
இணையதளத்தில் ஒரு ஆரோக்கியமான இலக்கிய சூழல் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடவடிக்கை இந்த ஆண்டு தொடக்கத்திலும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது 22 ஆயிரம் ஆபாச இணையதளங்களை சீன அரசு முடக்கியது. அதேபோல், 390 சிக்கலான விவகாரங்களில் தொடர்புடைய 17.5 லட்சம் தகவல்கள் அழிக்கப்பட்டன.