சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவுவதால், பயிர்களைக் காக்க செயற்கை மழையை உருவாக்கி, மேக விதைப்பு முறையைக் கையாள சீன அரசு முடிவு செய்துள்ளது. அந்நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த வாரம் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை கடந்ததால், வீடுகளில் குளிர்சாதன இயந்திரங்களின் தேவை அதிகரித்தது. இதனால் மின்சாரத்தை சேமிப்பதற்காக கடந்த வாரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
சீனாவின் ஆண்டு மொத்த உற்பத்தியில் இலையுதிர் கால அறுவடை 75 சதவீதம் பங்கு வகிப்பதால், எவ்வித சேதமும் ஏற்படாதவாறு அறுவடையை உறுதிப்படுத்த அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றனா். மேகத்தில் ரசாயனத்தை தூவி, செயற்கை மழையை உருவாக்கும் மேக விதைப்புத் திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக சீன வேளாண் அமைச்சக அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதென்ன செயற்கை மழை?
செயற்கை மழை என்பது மேகங்களை செயற்கையாக உருவாக்கி மழை பொழியச் செய்வது அல்ல. ஏற்கனவே இயற்கையாக உருவான மேகங்கள் மீது சில வேதிப்பொருட்களை தூவி மழையைப் பெறுவது தான் செயற்கை மழை. மிக எளிதாக தோன்றும் இந்த முறை உண்மையிலேயே மிகக் கடினமானது.
மழைத்துளிகள் அதிகம் இருக்கக் கூடிய மேகங்களை கண்டறிவது, அந்த மேகங்கள் நாம் நினைக்கும் இடத்திற்கு மேல் காற்றால் கொண்டுவரப்படும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வது, வேதிப்பொருட்களை சரியாக மேகங்களின் மீது தூவுவது என பல செயல்முறைகள் இதில் அடங்கும். மேகங்களின் மீது வேதிப்பொருட்களை “விதைகளாக” தூவி மழையை அறுவடை செய்வதால் இம்முறைக்கு “மேக விதைப்பு முறை” என்று மற்றொரு பெயரும் உண்டு. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இம்முறையின் மூலம் மழைப்பொழிவை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
அப்படி என்ன வேதிப்பொருளை தூவுவார்கள்?
இந்த செயற்கை மழை செயல்முறை 3 படிநிலைகளை உள்ளடக்கியது. 3 நிலைகளிலும் வேதிப்பொருட்கள் தான் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.
1. காற்றழுத்தத்தை உருவாக்குதல்:
எந்த இடத்தில் மழை பெய்யச் செய்ய வேண்டுமோ அந்த இடத்தில் காற்றழுத்தத்தை ஏற்படுத்த வேண்டு்ம். அதன் மூலம் மழை மேகங்களை ஒன்றுகூட செய்வதே முதல் படிநிலை ஆகும். கால்சியம் கார்பைடு, கால்சியம் ஆக்ஸைடு, உப்பும் யூரியாவும் கலந்த கலவை அல்லது யூரியாவும் அமோனியம் நைட்ரேடும் கலந்த கலைவையை மேகங்களில் தூவினால், அவை காற்றில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி மழை மேகத்தை உருவாக்க உதவு புரியும்.
2. மழை மேகங்களை அதிகரித்தல்:
ஒரே ஒரு மேகத்தை வைத்து பெரும் மழைப்பொழிவை உருவாக்க முடியாது அல்லவா? அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட பல மேகங்களை ஒன்று கூடச் செய்ய சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட், உலர் பனி ஆகியவற்றை தூவ வேண்டும். கால்சியம் குளோரைடும் சிலநேரங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு.
3. மழை மேகங்களை குளிரச் செய்தல்:
மூன்றாவது நிலையில் மழை மேகங்களை குளிரச் செய்து அதிக அளவு மழை பெய்யச் செய்கின்ற வேதிப்பொருட்களை தூவுவது . இந்த நேரத்தில் சில்வர் அயோடைடு மற்றும் உலர் பனி ஆகியவற்றை மேகங்களில் தூவுகின்றனர். அவற்றை மேகங்களின் மேல் தூவினால் மழை மேகங்கள் குளிர்ந்து நீர் துளிகளாக மழை பெய்ய தொடங்குகிறது.
இம்முறையில் மழை பெய்யும். ஆனால் ஒரு சிக்கல்?
மேலே குறிப்பிட்ட அனைத்து படிநிலைகளையும் சரியாகச் செய்யும் மழை பொழிவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் அவ்வாறு மழை பொழியும்போது ஒரு சிக்கல் எழுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். மிகச் சரியாக மழை பொழியத் துவங்கும் நேரத்தில் காற்று பலமாக வீசத் துவங்கிவிட்டால், மேகம் நகரத் துவங்கி விடுமாம். நாம் திட்டமிட்ட இடத்தை விட்டு பல கிலோமீட்டர் தூரம் சென்று அடைமழையை பொழியச் செய்த சம்பவங்கள் ஏராளமாக நிகழ்ந்திருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
செயற்கை மழை வைக்கும் செக்:
செயற்கை மழை பொதுவாக அதிக பண விரயம் மிக்க ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அளவுக்கு அதிகமான வேதிப்பொருட்களை தூவி மழை பெய்யச் செய்வது மாசுக்களை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவின் வறட்சியை போக்குமா செயற்கை மழை?
இயற்கையாக நிகழும் விஷயங்களில் அறிவியலை உட்புகுத்தி சில நன்மை பயக்கும் முயற்சிகள் பண்டைக்காலம் தொட்டு மனிதனால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் செயற்கை மழையும் அம்முயற்சியில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் சில மேம்பாடுகளை மேற்கொள்ளும்போது முழுக்க வெற்றிகரமான ஒன்றாக மாறி மனித குலத்திற்கே வரப்பிரசாதமாக செயற்கை மழை உருவெடுக்கக்கூடும். இருப்பினும் சீனா தற்போது எதிர்கொண்டுள்ள திடீர் வறட்சியை நீக்கி விளைச்சலை அதிகப்படுத்த செயற்கை மழை கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.