காஷ்மீர் விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிட அனுமதிக்க வேண்டுமெனெ கோரிய சீனா, ஹாங்காங் விவகாரத்தில் ஜி7 நாடுகள் தலையிடக்கூடாது என எச்சரித்துள்ளது.
ஹாங்காங் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் திட்டத்தை எதிர்த்து 12 வாரங்களாக ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஹாங்காங் அரசு அந்த முடிவை கைவிட்டது. எனினும் போராட்டக்காரர்கள் மீதான காவல்துறையினரின் அடக்குமுறை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
1984ம் ஆண்டின் சீனா-பிரிட்டிஷ் கூட்டறிக்கை அடிப்படையில் ஹாங்காங்கிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் ஹாங்காங், சீனாவின் ஒரு பகுதி என அந்த நாடு உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரம் நீட்டிக்கப்பட வேண்டும், ஹாங்காங் விவகாரத்தில் சீனா தலையிடக்கூடாது என போராட்டத்தில் ஈடுபடும் ஹாங்காங் மக்களுக்கு ஆதரவாக ஜி7 நாடுகள் கூட்டறிக்கை விடுத்துள்ளன. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த சீனா, ஐநா பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது குறித்து விவாதிக்க வேண்டும் என குரல் கொடுத்தது.
இந்நிலையில், ஜி7-ல் பங்கேற்ற நாடுகள் ஹாங்காங் விவகாரத்தில் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஹாங்காங் விவகாரத்தில் ஜி7 நாடுகள் தலையிடுவது தீய சக்திகளுக்கு துணைபோவது போன்றது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க விரும்பும் சீனா, ஹாங்காங் தனது உள்நாட்டு பிரச்னை என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.