சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்வதால் அச்சம் பெருகிவந்த நிலையில், அங்கு பரவுவது கொரோனாவின் அடுத்த திரிபு என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த புதிய திரிபு கொரோனா, ஒமைக்ரானை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது எனத் தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 15,000 எட்டியிருந்தது. அதன் பின்னர் தொற்று எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. `கொரோனா பாதிப்பு பூஜ்யமாக வேண்டும்’ என்ற கொள்கையை பின்பற்றி வரும் சீனா, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு 5,000-க்கும் அதிகமாக பதிவாகி இருப்பதால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது சீனா. எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், சீன அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்தி கோடிக்கணக்கான மக்களை வீடுகளுக்குள்ளேயே முடக்கியுள்ளது.
அதன்படி லாங்ஃபேங், சென்ஸென், ஷாங்காய் என பல நகரங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. உலகமெங்கும் அச்சுறுத்தி வந்த ஒமைக்ரான் வகை கொரோனா உருமாற்றம் அடைந்து சீனாவில் பரவி வருகிறது. இதனை STEALTH OMICRON அல்லது BA.2 SUB VARIANT என அழைக்கின்றனர். இது ஒமைக்ரானை விட ஒன்றரை மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. இதுவே சீனாவில் தொற்று எண்ணிக்கை உயர காரணம் எனத் தெரிய வந்துள்ளது. முக்கிய நகரங்கள் முடங்கி இருப்பதால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் உலகமெங்கும் மீண்டும் பொருள் விநியோக சங்கிலி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.