கிழக்கு சீன மாகாணமான ஜெஜியாங்கைச் சேர்ந்தவர் சூ. 54 வயதான இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தொடர் இருமலால் அவஸ்தைப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் சிகிச்சை எடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
ஒருகட்டத்தில் இதிலிருந்து தீர்வு பெறுவதற்காக கடந்த ஜூன் மாதம் மருத்துவமனைனை ஒன்றை அணுகியுள்ளார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு, CT ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது வலது நுரையீரலுக்குள் ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு கட்டி ஒன்று இருப்பது தெரியவந்தது.
மேலும், அது நிமோனியா அல்லது புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சூ மிகவும் பயந்துபோனார். இது, மேலும் அவரை கவலையடையச் செய்தது. இதனால், தனது நுரையீரல் திசுக்களின் ஒரு பகுதியை அகற்ற, தோராகோஸ்கோபி செய்ய முடிவெடுத்தார். அப்போதுதான், அவரது நுரையீரலில் இருந்தது வெறும் மிளகாய்த் துண்டு எனத் தெரியவந்தது. அதுதான் அவருக்கு தொடர் இருமலைத் தந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்தே, சூ மகிழ்ச்சியடைந்துள்ளார். அது பின்னர் அகற்றப்பட்டது.
பின்னர், அந்த மிளகாய்த் தூளின் நுனி நுரையீரலுக்குள் சென்றது குறித்து மருத்துவர்களிடம் நினைவுகூர்ந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹாட்பாட் உணவைச் சமைத்தபோதுதான் இந்த மிளகாய்த் தூளின் நுனி உள்ளே சென்றிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் ஜு சின்ஹாய், “மிளகாய்த்தூள் நுனி அவரது நுரையீரலுக்குள் சென்றிருக்கிறது. அது நுரையீரலின் திசுக்களுக்கு அடியில் மறைக்கப்பட்டிருந்தது. அதை நிலையான ஆய்வுநுட்பங்களைப் பயன்படுத்தி கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. இதன்விளைவாக அவரது வலது நுரையீரலில் நிணநீர் விரிவடைந்தது. அது நீண்டகாலமாக அவரது மூச்சுக் குழாய்களில் இருந்ததால், அது நுரையீரல் நோய்த்தொற்றை உருவாக்கியது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருமலுக்கும் வழிவகுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.