புரொமோஷனுக்காக இப்படியா? பாஸ் குடும்பம் சுட்டுக்கொலை; 8 வருடத்திற்கு பின் சிக்கிய சீனர்!
பதவி உயர்வு கொடுக்கவில்லை என்பதற்காக தனது பாஸ் உள்ளிட்ட அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் சுட்டுத் தள்ளிய நபரை கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து அமெரிக்க காவல்துறை கைது செய்திருக்கிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மோய்யி சன் (50), மேக்ஷி சன் (49), டிமோதி சன் (9) மற்றும் டைடஸ் சன் (7) ஆகிய நால்வரும் ஹூஸ்டனில் உள்ள அவர்களது வீட்டில் தனித்தனி அறைகளில் துப்பாக்கி குண்டுகளால் சுடப்பட்டு பலியாகி கிடந்தார்கள்.
இந்த சம்பவத்தின் பின்னணி தற்போதுதான் வெளிவந்ததாகவும், அதனையடுத்து கொலையை புரிந்த சீனாவைச் சேர்ந்த ஃபங் லு என்பவர் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
(சுட்டுக்கொல்லப்பட்ட சன் குடும்பம்)
இது தொடர்பான விசாரணையில், 58 வயதான ஃபங் லு தனது மேலதிகாரியான மோய்யி சன் தன்னை பதவி உயர்வுக்கு பரிந்துரைக்காத காரணத்தால் இந்த கொலையை செய்திருக்கிறார் என தெரிய வந்திருக்கிறது.
அதன்படி ஃபங் பணியாற்றி வந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுக்கு தான் மாற்றப்பட்டு பதவி உயர்வு கொடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்த்து காத்திருந்தார். இதற்காக நிறுவனத்திடம் தன்னை பற்றி நல்லவிதமாக கூறும்படி மோய்யியிடம் ஃபங் கேட்டிருந்திருக்கிறார்.
ஆனால், மறுநாள் அலுவலகத்துக்கு சென்ற ஃபங் லுவிடம் சக ஊழியர்கள் சரியாக நடந்துக்கொள்ளாததை கவனித்து, மோய்யிதான் ஏதோ தன்னைப்பற்றி தவறாக சித்தரித்திருக்கிறார், இழிவாக பேசியிருக்க வேண்டும் எனவும் சந்தேகித்திருக்கிறார். இதனால்தான் தனக்கு புரொமோஷன் கிட்டவில்லை என்றும் ஃபங் முடிவுக்கு வந்திருக்கிறார்.
பதவி உயர்வு குறித்து மோய்யியிடம் ஃபங் தகராறு செய்ததாக அவரது மனைவி விசாரணை அதிகாரிகளிடம் கூறினார். மேலும் ஃபங் ஒரு துப்பாக்கியை வாங்கியதாகவும் அவரது மனைவி தெரிவித்திருக்கிறார்.
ஆனால் தன் புரொமோஷனை கெடுத்ததாக மோய்யி மீது கோபமாக இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால், தான் கொலை செய்யவில்லை என தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். இருப்பினும் , மோய்யி சன் வீட்டில் இருந்து தடயவியல் குழுவினர் எடுத்த சில ரேகைகளை வைத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ததில் ஃபங்கின் மாதிரிகளோடு ஒத்துப்போயிருந்திருக்கிறது.
ஆனால் அப்போது ஃபங் லு சீனாவுக்கு சென்றுவிட்டார். இதனால் ஃபங்கை இனி எப்போதும் கைது செய்ய முடியாது என விசாரணை அதிகாரிகள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி கலிஃபோர்னியா விமான நிலையத்தில் வைத்து ஃபங் லு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.