சீனா தனது ஜிரோ கோவிட் பாலிசியை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் சுமார் 20 லட்சம் மக்கள் உயிரிழக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாக லண்டனை சேர்ந்த சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் குறைந்ததையடுத்து உலக நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை தளர்த்தின. ஆனால், சீனா கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் 'ஜிரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைபிடித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் குதித்ததால் சமீபத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்பும் அதிகரித்துள்ள நிலையில், சீனாவில் மயானங்கள் நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சீனா தனது ஜிரோ கோவிட் பாலிசியை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் சுமார் 20 லட்சம் மக்கள் உயிரிழக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாக லண்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய சுகாதார நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சீனாவில் சுமார் 27 கோடி மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடும் எனவும் 2.1 மில்லியன் இறப்புகள் ஏற்படலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீன மக்கள் மிகக் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளதாகவும், அந்நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்ட சினோவாக் மற்றும் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் குறைந்த செயல்திறன் கொண்டவை என்றும் இந்த தடுப்பூசிகள் கொரோனா தொற்று மற்றும் இறப்புக்கு எதிராக குறைவான பாதுகாப்பையே வழங்குவதாகவும் ஏர்ஃபினிட்டி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால், அதன் தாக்கமாக மற்ற நாடுகளிலும் கொரோனா பரவல் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தவற விடாதீர்: `கொரோனா பரிசோதனையை உடனடியாக அதிகரிங்க’ - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!