சீனாவின் துரித பரிசோதனை தொகுப்பு குறித்து பிரிட்டன் புகார் தெரிவித்த நிலையில், அந்நாட்டு அதிகாரிகள் கருவி குறித்து சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று சீனா பதில் அளித்துள்ளது.
பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவியதை அடுத்து, சீனாவிடம் இருந்து துரித பரிசோதனை தொகுப்புகளை அந்நாடு கொள்முதல் செய்தது. இந்திய மதிப்பில் சுமார் 133 கோடி ரூபாய்க்கு கருவிகளை பெற்றது. பிரிட்டன் போலவே இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் சீனாவிடம் இருந்து இவற்றை வாங்கின.
ஆல் டெஸ்ட் பயோடெக் , வோன்ட்ஃபோ பயோடெக் ஆகிய இரண்டு சீன நிறுவனங்கள் இந்தக் கருவிகளை உலக நாடுகளுக்கு விற்றன. ஆனால், அந்தக் கருவிகள் மூலம் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இல்லாமல் முரணாக காட்டுவதாக புகார் எழுந்தது. துரித பரிசோதனை தொகுப்பு குறித்து பிரிட்டன் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என கருவிகளை விற்ற சீன நிறுவனங்கள் பதிலளித்துள்ளன.
ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளியின் பாதிப்பை கண்டறியும் நோக்கத்தில் துரித பரிசோதனைத் தொகுப்பு தயாரிக்கப்பட்டதாக வோன்ட்ஃபோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே ஒரே நாளில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றை கண்டறியும் சோதனையை நடத்தும் வகையிலான பரிசோதனைக் கூடத்தை அமைக்கும் பணியில் பிரிட்டன் அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.