தென்சீன கடலில் செயற்கை தீவுகள்: சீனாவை எச்சரித்த அமெரிக்கா

தென்சீன கடலில் செயற்கை தீவுகள்: சீனாவை எச்சரித்த அமெரிக்கா
தென்சீன கடலில் செயற்கை தீவுகள்: சீனாவை எச்சரித்த அமெரிக்கா
Published on

தென்சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

எண்ணெய், இயற்கை எரிவாயு வளமிக்க தென் சீனக்கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு செயற்கை தீவுகளை சீனா அமைத்து, ராணுவ மயமாக்கி வருகிறது. ஆனால் தென்சீனக்கடல் பகுதியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக சொல்லி, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.

இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் தாக்கல் செய்த வழக்கை சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரித்து, “தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை” என தீர்ப்பு வழங்கியது.

ஆனாலும் சீனா தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து பேசினார். அப்போது அவர், “தென் சீனக்கடலில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை தீவுகளை சீனா ராணுவ மயமாக்குவதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என்றும், ஏற்கனவே இருந்து வருகிற நிலைப்பாட்டுக்கு மாறாக, எந்தவொரு ஒரு தலைப்பட்சமான, கட்டாய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

இதற்கு சீனா தனது வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் குறிப்பிடுகையில், “எங்கள் பிராந்தியத்தின் உரிமைகளை காத்துக்கொள்வதில் சீனா உறுதியாக நிற்கும்” என கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com