சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை சீன அதிகாரிகள் அழித்துள்ளனர்.
இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசம் மாநிலத்தின் பெரும்பகுதி நிலப்பரப்புக்கு சீனா உரிமை கோரி வருகிறது. ஆனால், இதற்கு இந்தியா தரப்பில் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையில் பல நேரங்களில் பதட்டமான சூழலும் காணப்படுகிறது.
இந்நிலையில், சீன சுங்கத்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டு, அருணாச்சலம், தைவான் ஆகியவற்றை சீனாவின் பகுதியாக குறிப்பிடாத 30 ஆயிரம் உலக வரை படங்களை அழித்துள்ளனர். அழிக்கப்பட்ட அந்த உலக வரைபடங்களில் தாய்வான் தனி நாடாக காட்டப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய, சீன எல்லையில் நிலப்பரப்பு சரியாக வரையறை செய்யப்படவில்லை என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் இறையாண்மையை நிலைநாட்டும் செயல் என்றும் அவர்கள் கூறினர்.
அருணாச்சலத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. அதனால், இந்திய தலைவர்கள் அருணாச்சல பிரதேசத்திற்கு வருகை தரும் போதெல்லாம் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்திய, சீன எல்லையிலுள்ள 3,488 கிலோ மீட்டர் எல்லைக் கோட்டு பகுதியில் நிலவும் சர்ச்சை தொடர்பாக 21 முறை இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சீனா, தாய்வான் தீவையும் தங்கள் நாட்டின் பகுதியாகவே கருதுகிறது.