சீனாவில் அண்மையில் விபத்துக்குள்ளான விமானம், ஒலியின் வேகத்தில் சென்றதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் குன்மிங் நகரில் இருந்து குவாங்ஜோ நகருக்கு செல்வதற்காக 'போயிங் 737' விமானம் கடந்த திங்கள்கிழமை மதியம் புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட அரை மணிநேரத்திலேயே, கட்டுப்பாட்டு அறை உடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணிகள் நடைபெற்றன.
இதில், அந்த விமானம் ஹுஜோ நகரத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. மேலும், விமானம் விழுந்ததால் அந்த மலைப்பகுதியில் பயங்கர தீ ஏற்பட்டது. 123 பயணிகள், 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 132 பேர் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தில் உள்ள கருப்புப் பெட்டியை தேடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும், அங்கு தீப்பற்றி எரிவதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டு வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விபத்து நேரிடுவதற்கு முன்பு அந்த விமானம் அதிவேகத்தில் சென்றதாக 'ப்ளூம்பெர்க்' என்ற புலனாய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்களை டிராக் செய்யும் வலைதளத்தை ஆய்வு செய்து இந்த தகவலை அது வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து அந்த இதழில் இன்று வெளியான கட்டுரையில், "ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737 விமானம் மணிக்கு 640 மைல் (966 கி.மீ.) என்ற வேகத்தில் சென்றிருக்கிறது. சில சமயங்களில் மணிக்கு 700 மைல் என்ற வேகத்திலும் அந்த விமானம் சென்றிருக்கலாம். இது கிட்டத்தட்ட ஒலியின் வேகத்துக்கு இணையானது ஆகும். அதாவது, கடல்மட்டத்தில் ஒலியின் அளவு மணிக்கு 761 மைல் ஆகும். ஆனால், 35 ஆயிரம் அடிக்கு மேலே ஒலியின் வேகம் என்பது மணிக்கு 663 மைலாக இருக்கிறது. எனவே, ஏறக்குறைய ஒலியின் வேகத்தில் விமானம் சென்றிருக்கிறது. ஒருவேளை, இந்த அதிவேகம் கூட விமானத்தின் இஞ்சினில் பாதிப்பை ஏற்படுத்தி விபத்துக்கு வழிவகுத்திருக்கலாம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.