38 பேருடன் நடு வானில் காணாமல்போன சிலி நாட்டு ராணுவ விமானத்தின் பாகங்கள் தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிக்கிற்கும் இடையே உள்ள கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிலியின் பண்டா அரேனாஸ் பகுதியில் இருந்து கடந்த திங்கட்கிழமை c -130 HERCULES என்ற விமானம் 38 பேருடன் அண்டார்டிகா நோக்கி பயணித்தது. புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த அந்த விமானத்தை தேடும்பணி இரண்டு நாட்களாக நடைபெற்றது.
இந்நிலையில் கடைசியாக தொடர்பில் இருந்த இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது. தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிக்கிற்கும் இடையே உள்ள கடல் பகுதியில் விமான பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தில் பயணம் செய்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.