தென் அமெரிக்கா நாடான சிலியில் மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்தது. உணவு மானியங்கள் தொடர்பாகவும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரியும், அந்நாட்டு கல்வி கொள்கைக்கு எதிராகவும் சாண்டியாகோவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பேரணி மேற்கொண்டனர்.
இதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவல்துறையினரும் மாணவர்களும் மோதிக் கொண்டதால், கலவரம் மூண்டது. இதனை தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை காவல்துறையினர் கலைத்தனர்.
காவலர்களின் வாகனங்களை மாணவர்கள் அடித்து உடைத்தனர். தீவைக்கப்பட்ட ஒரு பேருந்தை அணைக்க, காவல்துறையினர் தங்கள் தண்ணீர் பீரங்கி லாரிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சம்பவங்கள் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை மற்றும் யாரும் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.