சென்னையில் வானுயர்ந்த கட்டடங்கள் குறைவு! ஏன்? உலக வானுயர்ந்த கட்டடங்கள் தின சிறப்புபகிர்வு

சென்னையில் வானுயர்ந்த கட்டடங்கள் குறைவு! ஏன்? உலக வானுயர்ந்த கட்டடங்கள் தின சிறப்புபகிர்வு
சென்னையில் வானுயர்ந்த கட்டடங்கள் குறைவு! ஏன்? உலக வானுயர்ந்த கட்டடங்கள் தின சிறப்புபகிர்வு
Published on

சர்வதேச வானுயர்ந்த கட்டடங்கள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

மனித குலத்தின் வளர்ச்சியின் அடையாளங்களில் ஒன்று வானுயர்ந்த கட்டடங்கள். அமெரிக்காவில் பிரபல கட்டுமான பொறியாளர் லூயிஸ் ஹெச் சுலிவன் - இன் பிறந்த நாளே உலக வானுயர் கட்டட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகரித்ததால் பெருநகரங்களில் ஏற்பட்ட இடத்தட்டுப்பாடே வானுயர் கட்டடங்கள் பெருக முக்கிய காரணம்.

வானுயர் கட்டடங்களுக்கு முன்னோடி அமெரிக்காதான்:

மிக உயரமான கட்டடங்களை கட்டுவதற்கு உலகிற்கே முன்னோடி அமெரிக்கா. அங்கு சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் வானுயர் கட்டடங்கள் பெருகத் தொடங்கின. 1885 ஆம் ஆண்டு சிகாகோவில் 10 அடுக்குகளுடன் 45 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட காப்பீடு நிறுவன கட்டடமே அப்போது உலகின் உயரமான கட்டடமாக பார்க்கப்பட்டது.

தற்போது முதலிடத்தில் புர்ஜ் கலீபா:

கால ஓட்டத்தில் கழுத்து வலிக்க பார்க்க வைக்கும் கட்டடங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. துபாயில் உள்ள புர்ஜ் காலிஃபா கட்டடம் 828 மீட்டர் உயரத்துடன் உலகின் உயரமான கட்டடமாக தற்போது விளங்குகிறது. சீனாவில் உள்ள ஷாங்காய் டவர் 633 மீட்டர் உயரத்துடன் 2ஆவது இடத்திலும் தென்கொரியாவில் லோட்டே வேர்ல்டு டவர் 498 மீட்டருடன் 3ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவில் வானுயர் கட்டடங்கள்:

மும்பையில் உள்ள பலாய்ஸ் ராயல் (PALAIS ROYALE) என்ற 320 மீட்டர் உயர கட்டடம் இந்தியாவிலேயே உயரமான கட்டடமாக கருதப்படுகிறது. இந்தியாவில் மிகப்பெரும்பாலான வானுயர் கட்டடங்கள் மும்பையில் மட்டுமே உள்ளன. சென்னையை பொறுத்தவரை பெரம்பூரில் உள்ள எஸ்பிஆர் சிட்டி நிறுவனத்தின் 172 மீட்டர் உயர அடுக்கு மாடி குடியிருப்பு மிக உயரமான கட்டடமாக கூறப்படுகிறது.

சென்னையில் அவை குறைவு! காரணம் என்ன?

மற்ற பெருநகரங்களை விட சென்னையில் வானுயர் கட்டடங்கள் மிகமிகக் குறைவு. சென்னையில் கால நிலை கணிப்பிற்கான ரேடார் சாதனம் 60 மீட்டர் உயரத்தில் உள்ளதால் அதற்கு அதிகமான உயரத்தில் கட்டடங்கள் கட்ட தடை உள்ளதே இதற்கு காரணம்.

கட்டடங்கள் இல்லாமல் கட்டுமானங்கள் என்று பார்த்தால் ஆசியாவிலேயே உயரமான கட்டுமானமாக நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தளத்தில் உள்ள 471 மீட்டர் உயர இரும்பு கோபுரம் கருதப்படுகிறது. உலகிலேயே பாதுகாப்பு பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட உயரமான கட்டுமானமாகவும் இது திகழ்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com